மேலும் செய்திகள்
மாணவர்களை மத ரீதியான படத்திற்கு அழைத்து சென்ற பாதிரியாரால் சர்ச்சை
17 hour(s) ago | 19
அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மற்றும் பிரிந்து சென்றவர்களை, மீண்டும் சேர்ப்பது தொடர்பாக, பொதுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அ.தி.மு.க., பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம், வரும் டிச., 10ம் தேதி, சென்னை, வானகரத்தில் உள்ள, ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில், அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடக்க உள்ளது. இதற்கான அறிவிப்பை, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி நேற்று வெளியிட்டார். சட்டசபை தேர்தலுக்கு, நான்கு மாதங்களே உள்ள நிலையில், அ.தி.மு.க., பொதுக்குழு, செயற்குழு கூடுவது, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அ.தி.மு.க., தலைமையில் மெகா கூட்டணி அமைய, பிரிந்தவர்களை இணைப்பது குறித்து, பொதுக்குழுக் கூட்டத்தில், முடிவு எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு, அ.தி.மு.க., மட்டுமல்ல, தே.ஜ., கூட்டணி மத்தியிலும் எழுந்துள்ளது. இது குறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: கட்சி விதிகளின்படி, ஆண்டுக்கு ஒரு முறை நடத்தும் வழக்கமான பொதுக்குழு கூட்டமாக, இதை கருத முடியாது. ஏனெனில், சமீபத்தில், ஆர்.எஸ்.எஸ்., முன்னணி தலைவர்கள் இருவர், பழனிசாமியை சந்தித்தனர். அப்போது, 'பீஹாரில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., லோக் ஜனசக்தி போன்ற கட்சிகள் ஒன்று சேர்ந்ததால், அக்கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 'அதுபோலவே, தமிழக சட்டசபை தேர்தலிலும், அ.தி.மு.க., - பா.ஜ., கட்சிகளுடன் இதர கட்சிகளையும் சேர்த்து கூட்டணி அமைத்து, ஆட்சியை பிடிக்க வேண்டும். பீஹாரில், இரு துருவங்களாக இருந்த, நிதிஷ்குமார், சிராஜ் பஸ்வான் ஆகியோரை இணைத்து இமாலய வெற்றி பெற்றது போல், தமிழகத்திலும் நடக்க வேண்டும். 'அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட பிரபலங்களை, மீண்டும் இணைத்து, மெகா கூட்டணி அமைத்தால், வெற்றி உறுதி. பன்னீர்செல்வம், செங்கோட்டையன், தினகரன் போன்றோரை, இணைத்தால், கூட்டணிக்கு மற்ற கட்சிகள் தானாக வந்து சேரும். 'தொண்டர்களுக்கும் ஆட்சியை பிடித்து விடலாம் என்ற நம்பிக்கை வரும். மெகா கூட்டணி அமைத்து, அக்கட்சிகளும் பம்பரமாக சுழன்று பணியாற்றினால், தி.மு.க., ஆட்சியை அகற்றி விடலாம்' என, பழனிசாமியிடம் அவர்கள் எடுத்துரைத்துள்ளனர். அதற்கு பழனிசாமி, 'தே.ஜ., கூட்டணியில், பன்னீர்செல்வம் மற்றும் அ.ம.மு.க.,வை சேர்க்கலாம். ஆனால், அ.தி.மு.க.,வில் மீண்டும் இணைக்க, நான் தனிப்பட்டமுறையில் முடிவெடுக்க முடியாது. அ.தி.மு.க., செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலர்கள் முடிவு செய்து, பொதுக்குழுவில் ஒப்புதல் பெற வேண்டும். 'எனவே, உங்கள் கருத்தை கட்சி நிர்வாகிகளிடம் கலந்தாலோசித்து, நல்ல முடிவை தெரிவிக்கிறோம்,' என, கூறியுள்ளார். எனவே, அ.தி.மு.க., பொதுக்குழுவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். - நமது நிருபர் -
17 hour(s) ago | 19