உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கேரளாவைப்போல கூட்டுறவுத்துறையில் தமிழகம் முன்னேறுமா?

கேரளாவைப்போல கூட்டுறவுத்துறையில் தமிழகம் முன்னேறுமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை : கேரளாவில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளை இணைத்து ஆசியாவிலேயே சிறந்ததாக பாராட்டும் வகையில் கேரள கூட்டுறவு வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நலிவடைந்துள்ள கூட்டுறவு வங்கிகளை இணைத்து தமிழ்நாடு கூட்டுறவு வங்கியாக உருவாக்க வேண்டும்.தமிழகத்தில் மாநில கூட்டுறவு வங்கி, அதன் கீழ் 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், மூன்றாவது அடுக்காக 4500 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. மாநில தலைமை வங்கிக்கு நபார்டு வங்கி மிகக்குறைந்த வட்டிக்கு கடன் வழங்குகிறது. அந்த தொகையுடன் அரை முதல் முக்கால் சதவீத கூடுதல் வட்டியுடன் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்குகிறது.மத்திய வங்கியானது கூடுதலாக முக்கால் சதவீத கூடுதல் வட்டி நிர்ணயித்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு நிதி வழங்குகிறது. இந்த மூன்றடுக்கு வட்டி முறையால் பாதிக்கப்படுவது விவசாயிகள், பொதுமக்கள் தான். ஒவ்வொரு கட்டமாக வட்டி அதிகரித்துக் கொண்டே செல்வதால் தேசிய வங்கிகளுடன் ஒப்பிடும் போது சில வகை கடன்களுக்கு கூடுதல் வட்டி வசூலிக்கப்படுகிறது.

முன்மாதிரியான கேரளா

கேரளாவில் 14 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளும் ஒரு மாநில வங்கியும் உள்ளன. அதனுடைய கடன் சங்கங்கள் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளன. மக்கள் கூட்டுறவு வங்கிகளை அதிகமாக பயன்படுத்துவதால் டிபாசிட் தொகையும் நன்றாக கிடைக்கிறது. எனவே அனைத்து மத்திய வங்கிகளையும் ஒருங்கிணைத்து கேரள கூட்டுறவு வங்கி என உருவாக்கப்பட்டது. தற்போது ஆசியாவிலேயே மிகப்பெரிய கூட்டுறவு வங்கியாக கேரளா மாறி விட்டது. இதன் மூலம் மக்கள் குறைந்த வட்டிக்கு பயன்பெறுகின்றனர். தமிழகத்தில் 26 மத்திய கூட்டுறவு வங்கிகள் உள்ளதால் அவற்றை ஒருங்கிணைத்து தமிழ்நாடு வங்கி என உருவாக்க வேண்டும் என்கின்றனர் கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளன மாநில தலைவர் தமிழரசு, பொதுச்செயலாளர் சர்வேசன். அவர்கள் கூறியதாவது. எல்லா மாவட்ட கடன் சங்கங்களிலும் பொதுமக்களிடம் இருந்து டிபாசிட்தொகை பெறுவது சீராக இல்லை. அதனால் சங்கங்களுக்குள்ளேயே நிதி நெருக்கடியில் ஏற்றத்தாழ்வு அதிகமாக உள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் டிபாசிட் பெறுவது குறைவாக உள்ளதால் மக்களுக்கு வட்டிக்கு கடன் வழங்குவதும் குறைகிறது. இது சங்கங்களை மேலும் நஷ்டத்தில் தான் தள்ளுகிறது.

நிதியை கூட்டுறவுக்கு மாற்ற வேண்டும்

தமிழக அரசு உள்ளாட்சிகளுக்கு வழங்கும் நிதி அனைத்தும் தேசிய வங்கிகள் மூலம் தான் செலுத்தப்படுகிறது. தமிழகத்தில் கிராம அளவில் 4500 கூட்டுறவு கடன் சங்கங்கள் இருந்தும் தமிழக அரசின் நிதி இங்கு டிபாசிட்டாக பெறப்படுவதில்லை. தனித்தனி மாவட்டமாக இருப்பதோடு கடன் சங்கங்களுக்கு இடையே இன்டர்நெட் பேங்கிங்' வசதியும் இல்லை. தேசிய, தனியார் வங்கிகளைப்போல அனைத்து கிளைகளும் சர்வர்' இணைப்பில் கொண்டுவர வேண்டும்.ஏழை, நடுத்தர பயனாளர்கள் எண்ணிக்கை இங்கு அதிகம் என்பதால் மூன்றடுக்கு முறையை ரத்து செய்து விட்டு தமிழக கூட்டுறவு வங்கி என ஒரே வங்கியாக மாற்றவேண்டும். அனைத்து கிளைகளுக்கும் ஒரே வித வட்டிக்கு கடன் வழங்கினால் பொதுமக்களுக்கு கிடைக்கும் கடனுக்கான வட்டியும் குறையும். அரசின் அனைத்து துறைகளுக்கு செலுத்தப்படும் நிதியை தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் டிபாசிட் செய்வதன் மூலம் வருமானமும் அதிகரிக்கும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sree
ஜன 08, 2025 18:10

நல்லா இருந்தவையே நா ச மாக்கிய பெருமை குறை நார்க்கு காரணம்


Barakat Ali
ஜன 08, 2025 09:38

ஹிஹிஹி .... தமிழகம் எல்லாத்துறையிலும் முன்னேறியுள்ளது ..... அதற்கு ரோல் மாடலாக இருக்க எந்த மாநிலத்துக்கும் தகுதி இல்லை ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை