முதல்வர் ஸ்டாலினும், பா.ம.க., நிறுவனர் ராமதாசும் விரைவில் ஒரே மேடையில் தோன்றப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், வரும் சட்டசபைத் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. விழுப்புரத்தில், 21 சமூக நீதி போராளிகளுக்கான மணிமண்டபம், அரசு சார்பில் கட்டப்பட்டுள்ளது. வரும் 29ல் நடக்கும் அதன் திறப்பு விழாவில், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hgxo50n8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு, சமூக நீதி போராளிகள் குடும்பங்களுக்கும், சமூக நீதிக்காக குரல் கொடுத்து வரும் பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என, அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.விழுப்புரம் வழுதரெட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த மணிமண்டபத்தையும், முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமியின் நினைவு அரங்கத்தையும், வரும் 29-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அன்றைய தினம், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடக்க உள்ளது. இதையொட்டி, நேற்று விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., கூட்டம் நடந்தது. அதில் அமைச்சர் பொன்முடி பேசும்போது, ''சமூக நீதி போராளிகள் மணிமண்டப திறப்பு விழாவில் பங்கேற்க, பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கு அழைப்பு விடுக்கப்படும். அதற்கான ஏற்பாட்டை செய்யுமாறு, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார்,'' என்றார். தி.மு.க., எதிர்ப்பு அரசியல் செய்து வரும் பா.ம.க.,வும், அதன் தலைவர்களும் தி.மு.க., அரசு அழைப்பை ஏற்று, ஸ்டாலினுடன் ஒரே மேடையில் பங்கேற்பரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கேள்விக்கு பா.ம.க., வட்டாரம் கூறும் பதில் வேறு விதமாக இருக்கிறது.பா.ம.க.,வைச் சேர்ந்த விழுப்புரம் மாவட்ட நிர்வாகி ஒருவர் கூறியதாவது:சமூக நீதி போராளிகளின் தியாகத்தை போற்றும் நிகழ்ச்சி இது. பா.ம.க.,வின் நீண்டகால கோரிக்கையும் கூட. அதனால், இந்த விழாவில் பங்கேற்பதில் ராமதாசுக்கு ஆட்சேபம் இருக்க வாய்ப்பில்லை. அவர் பங்கேற்காவிட்டாலும், அன்புமணியை அனுப்புவார் என தெரிகிறது.மேலும், பா.ம.க.,வின் அரசியல் எதிரியான திருமாவளவன், சமீப காலமாக நடிகர் விஜய் மற்றும் அ.தி.மு.க.வை மையமாக வைத்து, அரசியல் ரீதியாக தன் முக்கியத்துவத்தை வளர்த்து வருகிறார். இது, ராமதாசுக்கு அறவே பிடிக்கவில்லை. அதனால், முதல்வர் ஸ்டாலினுடன் ஒரே மேடையில் தோன்றி, தி.மு.க., கூட்டணிக்கு போக்கு காட்டும் திருமாவளவனுக்கு, ராமதாசால் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க முடியும். இதன் வாயிலாக, அரசியல் ரீதியான நடுக்கத்தை திருமாவளவனுக்கு ஏற்படுத்த முடியும் என கருதியே, தி.மு.க., தலைமையும் பா.ம.க.,வை அழைக்கிறது. வன்னியர் இன ஓட்டுகளுக்காக நிகழ்ச்சி அரசு தரப்பில் நடத்தப்படுகிறது என, இந்த நிகழ்ச்சிக்கு வெளிப்படையான காரணம் சொல்லப்பட்டாலும்கூட, ராமதாஸை நிகழ்ச்சிக்கு அழைப்பதன் பின்னணி இதுவாகத்தான் இருக்க முடியும்.'அடுத்து ஆளப் போகும் கட்சியுடன்தான் கூட்டணி' என, அன்புமணி தொடர்ந்து கூறி வரும் நிலையில், இந்த வாய்ப்பை பா.ம.க., பயன்படுத்திக்கொள்வதே சரியான அணுகுமுறையாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார் - நமது நிருபர் -.