உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பேனர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி: புதுச்சேரிக்கு வழிகாட்டும் காரைக்கால்

பேனர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி: புதுச்சேரிக்கு வழிகாட்டும் காரைக்கால்

காரைக்காலில் பேனர், கட் அவுட் கலாசாரத்திற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் பேனர், கட் அவுட் வைப்பதையும், போஸ்டர் ஒட்டுவதையும் தடை செய்து புதுச்சேரியில் சட்டம் உள்ளது. ஆனால், சட்டத்தை மீறி பேனர், கட் அவுட் வைப்பது தொடர் கதையாக உள்ளது.

தேர்தல் நேரத்தில் மட்டும் அதிரடி நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள், மற்ற நேரங்களில் கண்டு கொள்வது கிடையாது. ஒருவழியாக தற்போது பேனர், கட் அவுட்களை அகற்றும் பணிகளைத் துவக்கி உள்ளனர். இருந்தபோதும், பல இடங்களில் அகற்றப்படாத பேனர்கள் வெயிலிலும், மழையிலும் கிழிந்துபோய், காற்றில் ஊசலாடிக் கொண்டுள்ளன. ஒரு பக்கம் பேனர்களை ஊழியர்கள் அகற்றினாலும், இன்னொரு பக்கம் பல இடங்களில் புதிது புதிதாக பேனர்கள் முளைத்துக் கொண்டுள்ளன. புதுச்சேரி நகரத்தின் அழகை சீர்குலைக்கும், வாகன ஓட்டிகளின் கவனத்தைச் சிதறடித்து விபத்துகளுக்குக் காரணமாக திகழும் பேனர், கட் அவுட் கலாசாரத்திற்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்த விஷயத்தில் புதுச்சேரிக்கு வழிகாட்டியாக காரைக்கால் திகழ்கிறது. சீனியர் எஸ்.பி., ஸ்ரீகாந்த் ஏற்பாட்டில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், பேனர், கட் அவுட் வைப்பதில்லை என முடிவு எடுக்கப்பட்டு, பல மாதங்களாக உறுதியாக பின்பற்றப்பட்டு வருகிறது. இதற்கு அனைத்து அரசியல் கட்சியினரும் ஒத்துழைப்பு அளிப்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற சூழ்நிலையில், முதல்வராக பதவியேற்ற பிறகு ரங்கசாமி முதன் முறையாக நேற்றுமுன்தினம் காரைக்காலுக்கு சென்றார். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோரும் முதல்வருடன் சென்றனர். என்.ஆர். காங்., ஆட்சி அமைந்த பிறகு முதன்முறையாக காரைக்காலுக்கு வரும் முதல்வரை வரவேற்று பேனர், கட் அவுட் வைப்பதற்கு என்.ஆர். காங்கிரசார் போலீசாரை அணுகி அனுமதி கேட்டனர். ஆனால், யாருக்கும் போலீசார் அனுமதி வழங்கவில்லை. சாலையில் வரவேற்பு வளைவுகள் அமைக்கவும் சிலர் அனுமதி கேட்டனர். இதற்கும் போலீஸ் அனுமதி வழங்கவில்லை. திருமணம் மற்றும் விழா நடக்கும் வளாகத்திற்குள் மட்டும் பேனர் வைத்துக் கொள்ள அனுமதி அளித்தனர். இதன் எதிரொலியாக காரைக்கால் நகர வீதிகள் பளீச்சென காட்சியளிப்பது தொடர்கிறது. போலீஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகளின் நடவடிக்கைக்குப் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத் துள்ளது. புதுச்சேரியும் காரைக்காலைப் பின்பற்ற வேண்டும்.

- நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை