தனியார் பள்ளி பஸ் மீது அரசு பஸ் மோதல் ஆசிரியர்கள், மாணவர்கள் 15 பேர் காயம்
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே தனியார் பள்ளி பஸ் மீது அரசு பஸ் மோதியதில் 15 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.விழுப்புரம் தனியார் பள்ளி மாணவர்கள், பேரணி என்ற இடத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி பஸ்சில் புறப்பட்டனர். பஸ்சை, விழுப்புரத்தை சேர்ந்த டிரைவர் டேனியல்,30; ஓட்டினார். காலை 9.30 மணிக்கு விக்கிரவாண்டி வடக்கு பைபாஸ் சந்திப்பில், போக்குவரத்து சிக்னலுக்காக தனியார் பள்ளி பஸ் நின்றது. அப்போது, விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பஸ், எதிரே நின்றிருந்த தனியார் பள்ளி பஸ் மீது மோதியது. அதில், தனியார் பள்ளி பஸ் முன்னால் நின்ற இரண்டு கார்கள் மீது மோதியது. இதனால் பஸ்சில் இருந்த மாணவர்கள் அலறினர். அங்கிருந்தவர்கள் ஓடி வந்து, மாணவர்களை மீட்டனர்.விபத்தில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் 15 பேர் மற்றும் அரசு பஸ் பயணிகள் இருவர் என 17 பேர் காயமடைந்தனர். அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். விபத்து காரணமாக வடக்கு பைபாஸில் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது. விபத்து ஏற்படுத்திய அரசு பஸ் டிரைவர், நரையூரை சேர்ந்த சிவா,48; மீது விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.