சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
புதுச்சேரி : புதுச்சேரியில் திருமணம் செய்து கொள்ளவதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய தனியார் நிறுவன ஊழியருக்கு போக்சோ விரைவு நீதிமன்றம் 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.புதுச்சேரியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, கல்லுாரி முதலாம் ஆண்டு படிக்க சென்று வந்தபோது, இடையார்பாளையம் தனியார் கம்பெனியில் பணியாற்றும் கடலுார் மாவட்டம், நல்லவாடு கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ரீகன் (எ) திருமாறன், 30; பழகினார்.சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்தார். அதில் சிறுமி கர்ப்பமானார். இந்நிலையில் ரீகன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள் முயற்சித்தார். இதை அறிந்த சிறுமி தன்னை திருமணம் செய்து கொள்ள திருமாறனை வலியுறுத்தியபோது, மறுத்ததுடன் மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் தவளக்குப்பம் போலீசில் புகார் அளித்தனர். போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிந்து ரீகனை கைது செய்தனர். தனது மகளுக்கு நீதி வேண்டும் என கூறி சிறுமியின் தந்தை கடந்த சில மாதத்திற்கு முன்பு தவளக்குப்பம் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிக்க முயற்சித்தார்.வழக்கு விசாரணை, போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் பச்சையப்பன் ஆஜரானார். குற்றம் சாடப்பட்ட ரீகனுக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை, ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சுமதி உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம் அளிக்க அரசுக்கு பரிந்துரை செய்தார்.