புதுச்சேரி: புதுச்சேரியில், ரூ.270 கோடியில் இலவச அரிசி வழங்க, கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளதாக, சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது:புதுச்சேரிக்கு புதிய சட்டசபை கட்டுவதற்கான கோப்பு, முதல்வர் ஒப்புதல் பெற்று கவர்னர் அனுமதிக்கு சென்றுள்ளது. அதை பரிசீலித்து விரைவில் முடிவு எடுப்பதாக கவர்னர் தெரிவித்துள்ளார்.திண்டிவனம் - புதுச்சேரி- கடலுார் ரயில் பாதை திட்டத்திற்கு, ரூ.50 கோடி திட்ட வரைவு அறிக்கை தயாரிக்க, கடந்தாண்டு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒப்புதல் அளித்தார். விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, மத்திய அரசிடம் சமர்ப்பித்த உடன், விரைவில் பணிகள் தொடங்கப்படும்.புதுச்சேரி மாநில அரசு பட்ஜெட்டுக்கு கேட்கும் நிதியை, ஒரு ரூபாய் குறைவின்றி மத்திய அரசு வழங்கி உள்ளது. மத்திய பட்ஜெட்டில் ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கீடு செய்யும் போது, புதுச்சேரிக்கு எந்த திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது என தெரியும்.ஜல்சக்தி திட்டத்தில், ரூ.33 கோடி நிதி புதுச்சேரிக்கு வழங்கப்பட்டது. அப்போதைய துறை செயலர் ரூ. 1 கோடி மட்டும் செலவிட்டு, மீதி நிதியை திருப்பி அனுப்பினார்.அரசு மட்டும் முயற்சி செய்து, திட்டங்களை நிறை வேற்ற முடியாது. கடந்த, 3 ஆண்டுகளாக இருந்த தலைமை செயலர்கள் அரசுக்கு எதிரான நடவடிக்கை எடுத்ததால் அரசு தேக்க நிலையை எட்டியிருந்தது.தற்போதைய தலைமை செயலர் அரசுக்கு தேவையான திட்டங்களை, நிறைவேற்ற முயற்சி எடுத்து வருகிறார்.புதுச்சேரி அரசின் கடனுக்கான வட்டி தள்ளுபடி பெறவும், முயற்சித்து வருகிறோம். இலவச அரிசி வழங்க, தலைமை செயலர் ஒப்புதல் அளித்துள்ளார். ரூ.270 கோடியில், இலவச அரிசி கோப்புக்கு கவர்னரும் அனுமதி அளித்துள்ளார். தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும், நிறைவேற்றப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பா.ஜ எம்.எல்.ஏ.,க்களால் ஆட்சிக்கு ஆபத்தா?
சபாநாயகர் செல்வத்திடம், பா.ஜ., எம்.எல். ஏ.,க் கள், குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், 'பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் டில்லியில் தொடர்ந்து முகாமிட்டிருப்பது குறித்து, அவர்களிடம் தான் கேட்க வேண்டும். அவர்கள் கட்சித்தலைவரை சந்தித்து கோரிக்கைகளை கூறுவதற்காக சென்றுள்ளனர். அது சம்மந்தமாக அவர்கள் முடிவு எடுப்பார்கள். அதனால் ஆட்சிக்கு எந்த பாதிப்பும் கிடையாது. தே.ஜ., கூட்டணி அரசு, 5 ஆண்டுகள் சிறந்த முறையில், செயல்படும்' என்றார்.