நெய்வேலி, : நெய்வேலி அடுத்த மாணடிக்குப்பத்தை சேர்ந்தவர் சிவகுமார் மனைவி ஜெயந்தி,38; இவர் கடந்த 18ம் தேதி நெய்வேலி வட்டம்-9ல் உள்ள பள்ளியில் தனது பிள்ளைகளை விட்டுவிட்டு, வீட்டிற்கு ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தார்.அப்போது காரில் வந்த மர்ம நபர்கள் ஜெயந்தியை மறித்து கத்தியை காட்டி மிரட்டி, அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தாலி செயினை பறித்து சென்றனர்.புகாரின் பேரில், நெய்வேலி டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் சுதாகர் தலைமையில் டெல்டா சப் இன்ஸ்பெக்டர்கள் பாபு, தாஸ் மற்றும் பாலமுருகன் ஆகியோர் விசாரித்து வந்தனர்.இந்நிலையில் டவுன்ஷிப் போலீசார் நேற்று மதியம் சென்னை - கும்பகோணம் சாலையில் உள்ள கண்ணுதோப்பு பாலம் அருகில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியே வந்த ரெனால்ட் காரை நிறுத்தி சோதனையிட முயன்றனர். உடன் காரில் வந்த 4 பேரும் தப்பியோட முயன்றனர். அவர்களில் மூவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.விசாரணையில், அவர்கள், சென்னை, பெசன்ட் நகர், கக்கன் காலனி ஜெகநாதன் மகன் அரவிந்தன், 28; கள்ளக்குறிச்சி, விளம்பார் கிழக்கு தெரு கருப்பன் மகன் வெங்கடேசன், 29; காஞ்சிபுரம் மாவட்டம், கெருகம்பாக்கம் திரு.வி.க., தெரு சிவா அய்யப்பன் மகன் ராமகிருஷ்ணன்,26; என்பதும், இவர்கள் திருச்சி கோவண்டாகுறிச்சி மாணிக்கராஜ் மகன் மோகன்ராஜ், 25, என்பவருடன் சேர்ந்து ஜெயந்தியிடம் தாலி செயினை பறித்தது தெரிய வந்தது.அதனையொட்டி மூவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து கார், கத்தி, இரும்பு பைப் மற்றும் 5 சவரன் தாலி செயினை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய மோகன்ராஜை தேடி வருகின்றனர்.