| ADDED : மே 09, 2024 04:31 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் 4 பேரிடம் நுாதன முறையில் 3.71 லட்சம் ரூபாய் மோசடி செய்த மர்ம கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.புதுச்சேரியை சேர்ந்தவர் பிரவீன்குமார். இவருக்கு மர்ம நபர் ஒருவர் போனில், வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் அதிகமாக சம்பாதிக்கலாம் என பேசினார். அதை நம்பி அவர் முன்பணமாக ரூ. 1.45 லட்சத்தை முதலீடு செய்தார். ஆன்லைன் மூலம் கொடுக்கப்பட்ட வேலைகளை செய்து முடித்தார். பணி செய்ததற்கான பணத்தையும் எடுக்க முடியவில்லை. இவரை தொடர்ந்து, மகேஷ், என்பவர் வேலை தொடர்பாக, விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார். பேஸ்புக்கில் வந்த விளம்பரத்தில் இருந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு பேசிய நபர், அரசியல் பிரமுகர் என கூறி வேலைக்காக முன்பணம் அனுப்ப வேண்டும் என கூறினார். அதை நம்பி, அவர். 37 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பி ஏமாந்தார். அதே போன்று, ராம்குமார், என்பவர், வேலை தேடியுள்ளார். வேலை வாய்ப்பு இணைய தள மூலமாக வந்த விளம்பரத்தை பார்த்து பிரபல நிறுவனத்திற்கு 1.5 லட்சத்தை அனுப்பினார். ஆனால் அந்த நிறுவனம் போலியானது என தெரியவந்தது. ஸ்ரீநிதி ஹர்ஷினி என்பவரின் வங்கி கணக்கில் இருந்து 39 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டது.இதுகுறித்து, 4 பேரும் கொடுத்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.