| ADDED : மே 31, 2024 02:33 AM
புதுச்சேரி: தென்கிழக்கு ஆசியா நாடுகளில் 1 லட்சம் பேரில் ஒன்பது பேருக்கு தண்டுவட மரப்பு நோய் பாதிப்பு உள்ளது என, டாக்டர் முகுந்தன் தெரிவித்தார்.புதுச்சேரி இந்திராகாந்தி பொது மருத்துவமனை நரம்பியல் துறை சார்பில், நடந்த மருத்துவ கருத்தரங்கை, மருத்துவக் கண்காணிப்பாளர் செவ்வேள் துவக்கி வைத்தார். நரம்பியல் துறை தலைவர் சுரேஷ் ஒருங்கிணைத்தார்.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை நரம்பியல் நிபுணர் முகுந்தன் பேசுகையில், 'தண்டுவட மரப்பு நோய் மூளை மற்றும் முதுகுத்தண்டை மூடியுள்ள நரம்புகளில் உள்ள கொழுப்பான வெள்ளை திசுக்களின் மீது ஏற்படும் வடுக்கள் காரணமாக வரும் நோயாகும்.இந்நோய் அதிக இளம் வயது பெண்களையே தாக்குகிறது. உலகளவில் ஆயிரம் பேருக்கு ஒருவர், தென்கிழக்கு ஆசியா நாடுகளில், ஒரு லட்சம் பேரில் ஒன்பது பேருக்கு தண்டுவட மரப்பு நோய் பாதிப்பு உள்ளது.கண் பார்வை மங்குதல், பக்கவாதம், கை, கால் செயலிழப்பு, மனவளர்ச்சி குன்றல், நிரந்தர நரம்பு பாதிப்பு உள்ளிட்டவை இந்த நோய் பாதிப்பில் ஏற்படும். சரியான மருத்துவ சிகிச்சைகள் எடுத்து கொண்டால் இதனைத் சரிசெய்ய முடியும். இதற்கான சிகிச்சைகள் அரசு மருத்துவமனையில் உள்ளது' என்றார்.கருத்தரங்கில் உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஷமிமுனிஸா பேகம், நரம்பியல் நிபுணர்கள் பரஞ்சோதி, ராஜாராமன், தேவி, கதிரியக்கவியல் நிபுணர் நாகராஜன், ரவிச்சந்திரன், டாக்டர்கள் கோவிந்தராஜ், ரங்கநாத், சிறுநீரியல் நிபுணர் வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.