காவல் துறையில் கருப்பு ஆடுகள் அங்காளன் எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
புதுச்சேரி : கவர்னர் உரையின் மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் அங்காளன் எம்.எல்.ஏ., பேசியதாவது:புதுச்சேரியில் குடிநீர் மற்றும் விவசாய நோக்கங்களுக்கான 78 குளங்கள் பழுது பார்க்கப்படும். குளங்களை புதுப்பித்தல் மற்றும் மீட்டமைத்தல் பணிகள் 750 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்பட உள்ளதாக கவர்னர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனது தொகுதியில் 68 குளங்கள் உள்ளன. இந்த திட்டத்தின் கீழ் புதுப்பிக்க வேண்டும்.புதுச்சேரியில் ஏராளமான ஏரி குளங்கள் உள்ளன. அனைத்தும் ஏரி வாய்க்கால், கணவாய்கள் துார்ந்துபோய் கிடக்கிறது. அனைத்து பகுதிகளிலும் வாய்க்கால்களை துார்வாரி ஏரி, குளங்களுக்கு மழை நீர் செல்ல செய்தாலே நிலத்தடி நீர் மட்டம் உயரும். எனது தொகுதியில், 9 பஞ்சாயத்துகளில் 4 பேர் மட்டுமே நுாறு நாள் திட்ட பணியை கண்காணிக்க மேற்பார்வையாளர்களாக உள்ளனர். இதனால் 100 நாள் வேலை திட்டம் நடக்கவில்லை. இந்த கோபம் எம்.எல்.ஏ.,க்களிடம் தான் திரும்புகிறது.அனைத்து தொகுதிகளிலும் மேற்பார்வையாளர்களை நியமித்து, 100 நாள் திட்ட பணிகளை துவக்க வேண்டும். ராஜிவ் சிக்னல்-இந்திரா சிக்னல் இடையே உயர்மட்ட பாலம் காலம் கட்ட வேண்டும் என்று கடந்த 2001ம் ஆண்டில் இருந்தே சட்டசபையில் வலியுறுத்தி வருகின்றேன். தற்போது 1,000 கோடிக்கு மேம்பாலம் ஒப்புதல் கிடைத்துள்ளது. மேம்பாலத்தை விரைவாக கட்டி முடிக்க வேண்டும். சட்டம்-ஒழுங்கில் பணியாற்றி வரும் காவல்துறை அதிகாரிகள் குற்றவாளிகளுடன் தொடர்பு வைத்துள்ளனர். கருப்பு ஆடுகள் நிறைந்த காவல்துறையை மாற்றி அமைக்க வேண்டும். இவ்வாறு அங்காளன் எம்.எல்.ஏ., பேசினார்.