புதுச்சேரியில் கைவரிசை காட்டிய சிதம்பரம் ஆசாமி கைது
புதுச்சேரி: புதுச்சேரியில் 8 மோட்டார் பைக் திருடிய சிதம்பரம் ஆசாமியை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். புதுச்சேரி பெரியக்கடை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பைக்குகள் திருடு போனது. இதைத் தொடர்ந்து, சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா உத்தரவின்பேரில், பெரியக்கடை இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம், 45 அடி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அவ்வழியாக சந்தேகத்திற்கு இடமாக பைக்கில் வந்த நபரை நிறுத்தி விசாரித்தனர்.அவர், கடலுார் மாவட்டம் சிதம்பரம் கீழமூங்கிலடி, அம்பலத்தடி குப்பம், தெற்கு வீதியை சேர்ந்த கேப்டன் பிரபாகரன், 38; என்பதும், அவர் ஓட்டி வந்தது திருட்டு பைக் எனவும் தெரிய வந்தது. அவரிடம் தீவிரமாக விசாரித்ததில், பெரியக்கடை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 5 பைக், ஒதியஞ்சாலை, உருளையன்பேட்டையில் தலா ஒரு பைக் திருடியதை ஒப்புக் கொண்டார்.கேப்டன் பிரபாகரன் திருடி மறைத்து வைத்திருந்த 7 மோட்டார் பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ. 6 லட்சம். கைது செய்யப்பட்ட கேப்டன் பிரபாகரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கேப்டன் பிரபாகரன் மீது தமிழக போலீஸ் நிலையங்களிலும் பைக் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.