புதுச்சேரி, : தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று புதுச்சேரி மாநில பா.ஜ., தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என முன்னாள் தலைவர் சாமிநாதன் வலியுறுத்தி உள்ளார்.நடந்து முடிந்த புதுச்சேரி லோக்சபா தேர்தலில், ஆளும் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணியில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயமும், காங்.,- தி.மு.க., கூட்டணியில் வைத்திலிங்கம் போட்டியிட்டனர்.புதுச்சேரியில் என்.ஆர்.காங்., 10 எம்.எல்.ஏ.க்கள், பா.ஜ., 6, பா.ஜ., ஆதரவு சுயேட்சைகள் 3, நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் என 22 பேர் ஆதரவு இருந்த நிலையில், 1.36 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில், காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் வெற்றி பெற்றார்.இதன் தொடர்ச்சியாக புதுச்சேரி பா.ஜ.,வில் மோதல் வெடித்துள்ளது. தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தற்போதைய தலைவர் செல்வகணபதி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என முன்னாள் தலைவர் சாமிநாதன் அறிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:புதுச்சேரியில் 10 ஆண்டு களாக அமைப்பு ரீதியாக தேர்தல் நடத்தி கடுமை யாக உழைத்ததால், கடந்த சட்டசபை தேர்தலில் 6 எம்.எல்.ஏ.,க்கள் தேர்வாகி, கூட்டணி ஆட்சியில் இடம் பெற்றனர். எந்த அனுபவமும் இன்றி, திடீரென கட்சி தலைமை பொறுப்பேற்ற செல்வகணபதியின் மோசமான நிர்வாக திறமை யால், ஆளும்கட்சி அமைச்சராக உள்ள ஒரு வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டுள்ளார்.இதற்கு பொறுப்பேற்று கட்சியின் மாநில தலைவர் செல்வகணபதி, தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.