புதுச்சேரி விமான நிலையத்தில், கடலோர காவல் படையினர் விரைவாக வான்வெளி பயணம் செய்ய, 'ஏர் என்கிளேவ்' தளத்தை, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று காணொலி மூலம் திறந்து வைக்கிறார்.லாஸ்பேட்டை, நாவற்குளத்தில் இந்திய கடலோர காவல் படையின், புதுச்சேரி தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் மத்திய பகுதி வரையில், அதாவது மரக்காணம் முதல் கோடியக்கரை வரையிலும், கடலோர பாதுகாப்பு கண்காணிப்பு பிரிவின் கீழ், செயல்பட்டு வருகிறது.இந்திய கடலோர பாதுகாப்பு படையில் கப்பல்கள், ரோந்து படகுகள் மட்டுமின்றி, ரோந்து ெஹலிகாப்டர் மற்றும் விமானங்களும் உள்ளன. புதுச்சேரி தலைமையகத்தை பொருத்தவரை, தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் இருந்து சிறிய அளவிலான ரோந்து படகுகள் செயல்பட்டு வருகின்றன.தற்போது புதுச்சேரி துறைமுகம் அருகே படகுகள், கப்பல்கள், ெஹலிகாப்டர்களை இயக்கவும், கடலோர காவல்படை நடவடிக்கை எடுத்துள்ளது. கப்பல்களை இயக்கிட, புதுச்சேரி துறைமுகம் அருகே, புதிய தளம் அமைக்க, 4 ஏக்கர் நிலத்தை வழங்க, புதுச்சேரி அரசு ஒப்புக்கொண்டுள்ளது.அதேபோல, வான்வழி கடலோர கண்காணிப்பு திறன்களை மேம்படுத்த லாஸ்பேட்டை, விமான நிலைய முனைய கட்டடம் எதிரே, டாக்சி டிராக்குடன் கூடிய 'ஏர் என்கிளேவ்' அமைக்கப்பட்டுள்ளது.இதன் திறப்பு விழா இன்று மாலை 4:30 மணிக்கு நடக்கிறது. இதில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு, சென்னையில் இருந்து காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார். விழாவில், இந்திய கடலோர காவல் படையின் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.இதன் மூலம், விரைவான வான் வழி தேடல் மற்றும் மீட்பு பணிகளை தொடங்க முடியும். இங்கு, 2 இலகுரக ெஹலிகாப்டர்கள் நிறுத்தி வைக்கப்பட உள்ளன.தற்போது வரையிலும், வான்வழி பயணங்கள், சென்னையில் இருந்து அல்லது கடலோர கப்பல்களில் இருந்து, தான் துவங்கப்படுகிறது. இனி வரும் காலங்களில், ஏதேனும் அவரச அழைப்பு வந்தால், புதுச்சேரியில் இருந்து விரைவான பணிகளை தொடங்க முடியும்.