கூரியரில் அனுப்பிய காசோலை மோசடி நுகர்வோர் ஆணையம் அதிரடி தீர்ப்பு
புதுச்சேரி: காசோலை மோசடியாக பணம் மாற்றம் செய்யப்பட்டதை கண்டறிய தவறிய தனியார் வங்கிக்கு அசல் தொகையை 9 சதவீத வட்டியுடன் பாதிக்கப்பட்டவருக்கு திரும்பி தர மாநில நுகர்வோர் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.புதுச்சேரியை சேர்ந்தவர் சிவராஜ். இவர் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் காசோலையை, பெங்களூருவில் வசிக்கும் தனது சகோதரர் அமரராஜ் தனராஜுக்கு, தனியார் கூரியர் மூலம் கடந்த 2012 ஜூன் 23ம் தேதி அனுப்பினார்.ஆனால், அந்த காசோலை அடங்கிய கூரியர் அவருக்கு சேரவில்லை. சந்தேகமடைந்த அவர் இது தொடர்பாக தன்னுடைய வங்கியை அணுகி விசாரித்தபோது, காசோலையைடெலிவரி செய்த ரோஹித் என்பவர் அந்த காசோலையை பணமாக்கி, பெங்களூரு, ஜயநகர் கிளையில் அவரது கணக்கில் வரவு வைத்திருப்பது தெரியவந்தது.அதிர்ச்சியடைந்த அவர் புதுச்சேரி மாநில நுகர்வோர் ஆணையத்தில் முறையிட்டு இருந்தார். இம்மனுவை விசாரித்த ஆணைய தலைவர் சுந்தரவடிவேலு மற்றும் உறுப்பினர் உமாசங்கரி ஆகியோர், சிவராஜ் கணக்கு வைத்துள்ள தனியார் வங்கி காசோலையில் வெளிப்படையான மாற்றத்தை கண்டறியத் தவறிவிட்டது.மாற்றப்பட்ட காசோலையை செயல்படுத்தியதில் பெரும் அலட்சியத்தை காட்டியுள்ளது. பெறுநரின் பெயரை மாற்றியது எளிதில் கண்டறியக்கூடியது. இது இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் மற்றும் நெகோஷியபிள் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் சட்டத்தின்படி மீறல். காசோலையில் செய்த பெயர் மாற்றம் ஒரு சாதாரண மனிதனின் கண்களுக்குக் கூட வெளிப்படையாக தெரியும்.ஆனால்,வங்கி விதிமுறைகளை கடைப்பிடிக்கத் தவறியது. எனவே அசல் தொகையை திருப்பிச் செலுத்துவதோடு மட்டுமல்லாமல், காசோலை மோசடியாகபணமாக்கப்பட்ட கடந்த 2012 ஜூன் 26ம் தேதி முதல், தொகை திரும்ப கிடைக்கும் தேதி வரை ஆண்டுக்கு 9 சதவீத வட்டியையும் வழங்க வேண்டும் என, உத்தரவிட்டனர்.