கடலோர பாதுகாப்பு சாகர் கவாச் ஒத்திகை காலாப்பட்டு போலீசாரிடம் சிக்கிய டம்மி தீவிரவாதிகள்
புதுச்சேரி: புதுச்சேரியில் கடலோர பாதுகாப்பை உறுதி செய்யும் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நேற்று துவங்கியது. பல்கலைக்கழகத்திற்குள் மாறுவேடத்தில் நுழைய முயன்ற 4 பேரை காலாப்பட்டு போலீசார் பிடித்தனர். இந்திய கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை இரண்டு முறை நடத்தப்படுகிறது. அதன்படி புதுச்சேரியில் இரண்டு நாட்கள் நடக்கும் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நேற்று காலை துவங்கியது.புதுச்சேரி கடலோர போலீஸ் மற்றும் கடலோர பாதுகாப்பு படையினர் ரோந்து படகுகள் மூலம் ரோந்து பணியை மேற்கொண்டனர். கடற்கரை மீனவ பஞ்சாயத்தார்களிடம் சந்தேகத்திடமாக வரும் நபர்கள் குறித்த தகவல்களை தெரிவிக்க அறிவுறுத்தி இருந்தனர்.கடற்கரையோரம் உள்ள மத்திய அரசு அலுவலகம், மாநில அரசு கட்டடங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. நேற்று மதியம் 12:00 மணிக்கு, புதுச்சேரி பல்கலைக்கழக நுழைவு வாயில் 1 மற்றும் 2வது பகுதிக்கு மாணவர்கள் போர்வையில் வந்த 3 பேரை பாதுகாப்பு பணியில் இருந்த காலாப்பட்டு போலீசார் சோதனை நடத்தினர்.அப்போது போலியான அடையாள அட்டை வைத்திருந்ததும், பையில் டம்மி பாம் ஒன்று கொண்டு வந்தது தெரியவந்தது. அதுபோல், 1 மற்றும் 2ம் எண் கேட்டிற்கு இடைப்பட்ட பகுதி மதில் சுவர் ஏறி பல்கலைக்கழகத்திற்குள் செல்ல முயன்ற மேலும் ஒருவரை போலீசார் பிடித்தனர்.தேங்காய்திட்டு துறைமுகத்தில் கடலோர போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் படகு ஒன்று துறைமுகம் வந்தது. விசாரணையில், படகில் இருந்த டீசல் தீர்ந்ததால் கரை வந்ததாக தெரிவித்தனர். சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.