| ADDED : ஏப் 07, 2024 05:19 AM
புதுச்சேரி : கிராமப்புறங்கள் மத்தியில் உள்ள அரசு மருத்துவமனையில் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் கடி மருந்து மற்றும் ஊசிகளை இருப்பு வைத்துக் கொள்ள இ.கம்யூ., வலியுறுத்தியுள்ளது.இ.கம்யூ., மண்ணாடிப்பட்டு தொகுதி செயலாளர் பெருமாள், பொருளாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கை:திருக்கனுார் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் அவசர சிகிச்சைக்காக மண்ணாடிப்பட்டு சமுதாய நலவழி மையத்திற்கு சென்று வருகின்றனர். ஆனால், இந்த மருத்துவமனையில் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் கடிக்கான அவசரகால மருந்து மற்றும் ஊசிகள் ஏதுவும் இருப்பு இல்லை.இதனால், கடந்த மாதம் 5ம் தேதி பாம்பு கடித்து அவசர சிகிச்சைக்காக மண்ணாடிப்பட்டு சென்ற திருக்கனுார் வணிகர் வீதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் பாம்பு கடி ஊசி இல்லாததால், ஜிப்பர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார்.ஆகையால், கிராமப்புறங்கள் மத்தியில் அமைந்துள்ள மண்ணாடிப்பட்டு சமுதாய நலவழி மையத்தில் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் கடிக்கான மருந்து மற்றும் ஊசிகளை இருப்பு வைத்திருக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.மேலும், மருந்தின்றி இறந்த சரவணன் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.