| ADDED : மார் 25, 2024 05:03 AM
புதுச்சேரி: லோக்சபா தேர்தலில் 100 சதவீத ஓட்டு பதிவினை முன்னிலைப்படுத்தி வரும் தேர்தல் துறை, மாதிரி ஓட்டு பதிவு செயல் விளக்கம் நிறுத்தப்பட்டது.புதுச்சேரி லோக்சபா தேர்தலில் 100 சதவீத ஓட்டு பதிவு இலக்கினை நோக்கி தேர்தல் துறை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. நகர்ப்புறங்கள், கிராமப் புறங்கள் வரையில் தேர்தல் ஆணையத்தின் தேர்தல் விழிப்புணர்வு சென்றடைந்திருக்கிறது. இத்தகைய நடவடிக்கைகளால் இம்முறை ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் நம்பிக்கையாக உள்ளனர்.வழக்கமாக ஒவ்வொரு லோக்சபா தேர்தலிலும், மாதிரி ஓட்டுப் பதிவு இயந்திரத்துடன் கூடிய வாகனத்தை களத்தில் இறக்கி ஓட்டுப் பதிவு குறித்து செயல்விளக்கம் அளிக்கப்படும். ஓட்டுப்பதிவிற்கு முந்தைய நாள் வரை கூட்ட மாதிரி ஓட்டு பதிவு செயல்விளக்கம் நடக்கும். இந்த முறை லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டதும் மாதிரி ஓட்டு பதிவு செயல்விளக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.மாதிரி செயல்விளக்கம் முன் கூட்டியே நிறுத்தப்பட்டது குறித்து தேர்தல் துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, 'தேர்தல் விழிப்புணர்வு நடைமுறையில் இந்த முறை இந்திய தேர்தல் ஆணையம் மாற்றம் கொண்டு வந்துள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியான உடனே மாதிரி ஓட்டு பதிவினை நிறுத்தப்பட்டுவிட்டது. இருப்பினும் கடந்த ஒன்னரை மாதமாக கிராமம், நகரம் என அனைத்து பகுதிகளிலும் ஓட்டு பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம். எனவே நிச்சயமாக ஓட்டு பதிவு சதவீதம் அதிகரிக்கும்' என்றனர்.