மருத்துவ சுற்றுலா மையமாக புதுச்சேரியை மாற்ற நடவடிக்கை கவர்னர் கைலாஷ்நாதன் தகவல்
புதுச்சேரி: மருத்துவ சுற்றுலா மையமாக புதுச்சேரியை மாற்றுவதற்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என, கவர்னர் கைலாஷ்நாதன் தெரிவித்தார்.புதுச்சேரி ராஜிவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் சுகாதாரத்துறை சார்பில், ரூ. 11.50 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 1.5 டெஸ்லா எம்.ஆர்.ஐ., ஸ்கேன் கருவியை, கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் நேற்று துவக்கி வைத்தனர்.நிகழ்ச்சியில், கவர்னர் பேசுகையில், 'காரைக்கால் அரசு மருத்துவமனையில் பழுதான பழைய சலவை எந்திரத்தை மாற்றுவதற்கு 17 லட்சம் ரூபாய் தேவை. அரசு சார்பில், வாங்குவதற்கு நிதி கிடைப்பதில் நீண்ட காலம் ஆகும். என்னை சந்திக்க வந்த தனியார் தொழில்துறையினரிடம் இதனை வாங்கி தர கோரினேன்.அவர்கள் வாங்கி தருவதாக கூறி விட்டனர். சின்ன மாநிலமான புதுச்சேரியில், இந்தியாவில் எங்கும் இல்லாத அளவிற்கு 9 மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. இதனை பயன்படுத்தி மருத்துவ சுற்றுலா மையமாக புதுச்சேரியை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அகமதாபாத்தில் உள்ள பிரபல மருத்துவமனைகளுக்கு ஆப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த அந்நாட்டு அதிபர்கள், அமைச்சர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் சிகிச்சைக்காக மருத்துவ சுற்றுலாவில் வருகின்றனர்.அதேபோன்று புதுச்சேரியை மாற்றுவதற்கு, இங்கு வந்த பிரான்ஸ் அமைச்சரிடம் பிரெஞ்சு ரீயூனியன் தீவுகளின் மருத்துவ சுற்றுலா மையமாக புதுச்சேரியை மாற்றுவது குறித்து பேசினேன். ஒரு வருடத்தில் அதை ஏற்படுத்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என்றார்.நிகழ்ச்சியில் ரமேஷ் எம்.எல்.ஏ., கலெக்டர் குலோத்துங்கன், சுகாதார துறை இயக்குனர் ரவிச்சந்திரன் துணை இயக்குநர்கள் ரகுநாதன், ரமேஷ், மருத்துவ கண்காணிப்பாளர்கள் அய்யப்பன், உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ரொசாரியோ, மக்கள் தொடர்பு அதிகாரி குருபிரசாத் உடனிருந்தனர்.