| ADDED : ஜூலை 31, 2024 11:30 PM
புதுச்சேரி:கவர்னர் ராதாகிருஷ்ணன், போலீசாரின் வழியனுப்பு அணிவகுப்பு மரியாதையுடன் புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு சென்றார்.புதுச்சேரி கவர்னர் தமிழிசை லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்பியதால் கவர்னர் பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து, ஜார்கண்ட் மாநில கவர்னர் ராதாகிருஷ்ணன், புதுச்சேரி மாநில கவர்னர் பொறுப்பை கடந்த மார்ச் 22ம் தேதி முதல் கூடுதலாக கவனித்து வந்தார். இந்நிலையில் நாடு முழுதும் 12 மாநில கவர்னர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில், ஜார்கண்ட் மற்றும் புதுச்சேரி கவர்னராக பொறுப்பு வகித்த ராதாகிருஷ்ணன், மகாராஷ்டிரா மாநிலத்திற்கு மாற்றப்பட்டார். நேற்று காலை அமைச்சர் திருமுருகனுக்கு இலக்கா ஒதுக்கீடு செய்யும் ஆணையில் கவர்னர் கையெழுத்திட்டார். தொடர்ந்து, புதுச்சேரி சட்டசபையில் உரையாற்றி, பட்ஜெட் கூட்டத் தொடரை துவக்கி வைத்தார்.பின், போலீசார் அளித்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, பொதுமக்களுக்கு வணக்கம் தெரிவித்தபடி, காரில் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.அங்கிருந்து மும்பை செல்லும் அவர், மகாராஷ்டிரா மாநில கவர்னராக பொறுப்பேற்க உள்ளார். புதுச்சேரி கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள கைலாசநாதன் வரும் 7ம் தேதி புதுச்சேரி கவர்னராக பொறுப்பேற்க உள்ளார்.