புதுச்சேரி : புதுச்சேரி அரசு குரூப் -பி பணியிடத்திற்கு வயது தளர்வு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை நிராகரித்ததுடன், குரூப் - சி பணியிடங்களுக்கு எவ்வாறு தளர்வு அளிக்கப்பட்டது என, கேள்வி எழுப்பி உள்ளது.சிறிய மாநிலமான புதுச்சேரியில் 15 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். பிரஞ்சு கலாசாரம் கலந்த பகுதி என்பதால் சுற்றுலா பிரதான தொழில். பெரிய அளவில் தொழிற்சாலைகள், சாப்ட்வேர் கம்பெனிகள் ஏதும் கிடையாது. எப்போதாவது அறிவிக்கப்படும் அரசு வேலை வாய்ப்பு மற்றும் வெளி மாநில தொழிற்சாலை, சாப்ட்வேர் கம்பெனிகளை நம்பியே புதுச்சேரி இளைஞர்கள் உள்ளனர்.ஆனால் ஒவ்வொரு ஆண்டும் பட்ட படிப்பு முடித்து பல ஆயிரம் மாணவர்கள் வெளியே வருகின்றனர். பணி பாதுகாப்பு, நிரந்தர வருமானம், சலுகைகள் சமூக அந்தஸ்து உள்ளிட்டவைக்காக இளைஞர்களின் முதல் கனவு அரசு பணியாக உள்ளது. புதுச்சேரியில் சுகாதாரத்துறை, பொதுப்பணி, கல்வி, உள்ளாட்சி, வருவாய் என 54 துறைகள் உள்ளது.இதில், கடந்த 2005 முதல் 2020 வரை ஏராளமான துறைகளில் அரசு பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன. கடந்த 2018ம் ஆண்டு காங்., ஆட்சியில் போலீசில் காலியாக உள்ள 390 கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியானது.பல ஆண்டுகளாக அரசு பணியிடம் நிரப்பாததால், வயது தளர்வு அளிக்க கோரிக்கை எழுந்தது. அதைத் தொடர்ந்து 2 ஆண்டுகள் வயது தளர்வு அளித்து, 2020ம் ஆண்டு தேர்வு நடந்தது. குரூப் - சி பணியிடங்கள் நிரப்புவதற்கான பணி நியமன விதிகளை மாநில அரசு கவர்னர் ஒப்புதலுடன் திருத்தம் செய்த கொள்ள அனுமதி உள்ளது.அதன்படி, குரூப் - சி பணியிடங்களான கான்ஸ்டபிள், எல்.டி.சி., யு.டி.சி., உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பும்போது, கொரோனா ஊரடங்கு காரணம் காட்டி 2 ஆண்டுகள் வயது தளர்வு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, குரூப் -பி பணியிடமான சப்இன்ஸ்பெக்டர் பணியிடத்திற்கும் 2 ஆண்டு வயது தளர்வு அளிக்க புதுச்சேரி அரசு, மத்திய அரசிடம் அனுமதி கோரியது.இதனை கண்ட மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை, குரூப் -பி பணியிடங்களுக்கு இதுபோன்று வயது தளர்வு அளிக்க முடியாது என, கோப்பை திருப்பி அனுப்பியது. அத்துடன், குரூப் -சி பணியிடங்களுக்கு நாடு முழுதும் இதுபோன்ற வயது தளர்வு எங்கும் அளித்ததுகிடையாது. புதுச்சேரியில் எவ்வாறு இதற்கு அனுமதி அளிக்கப்பட்டது என்பதை விளக்கம் அளிக்க வேண்டும் என கோரியுள்ளது.இதுவரை வயது தளர்வு மூலம் அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு குறித்த தகவல்களை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. தீயணைப்பு துறை, வருவாய்த்துறை, கூட்டுறவு துறைகளில் நிரப்பட உள்ள பணியிடங்களில் வயது தளர்வு அளிக்கலாமா, அளிக்க கூடாதா என நிர்வாகத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.