| ADDED : ஜூன் 30, 2024 05:17 AM
விழுப்புரம் : 'கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் பணம் கொடுத்தால் போதும் என முதல்வர் நினைக்கிறார்' என இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவர் தமிழரசன், கூறினார்.விழுப்புரத்தில் நேற்று அவர், நிருபர்களிடம் கூறியதாவது:கள்ளக்குறிச்சியில் அரசு ஆதரவோடு படுகொலை நடந்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்ச கள்ளச்சாராயம் உயிரிழப்பு இங்குதான் நடந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின், பாதித்த குடும்பங்களுக்கு ஆறுதல் கூறக்கூட வரவில்லை. பணம் கொடுத்தால் போதும் என நினைக்கிறார். நிர்வாக திறமின்மையால் பல உயிர்கள் போனது.மரக்காணம், செங்கல்பட்டு சம்பவத்திற்கு பின் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்க வேண்டும். கடும் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த மரணம் நிகழ்ந்திருக்காது.தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம், சமூக நீதி ஆணையம் மாநில அரசிடம் உள்ளது. ஆனால், மத்திய அரசு ஆணையம் மட்டுமே இங்கு வந்துள்ளது. மாநில அரசு ஆணையம் வரவில்லை.மாநில தாழ்த்தபட்டோர் ஆணைய தலைவர் பொறுப்பு காலியாக உள்ளது. இந்த பதவிக்கு ஒடுக்கப்பட்டோர் சிக்கல்கள் தெரிந்து களையும் அனுபவஸ்தர்களை நியமிக்க வேண்டும்.விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான அ.தி.மு.க., புறக்கணித்துள்ளது. இந்த தேர்தலில் ஓட்டளிப்பது வாக்காளர்களின் உரிமை.என்னை பொறுத்தவரை தேர்தலில் விதிமுறை மீறல் சிந்தனை கொண்டோர் நோட்டாவுக்கு ஓட்டளியுங்கள். நோட்டாவிலும் சிக்கல் உள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றவரை விட, நோட்டா அதிகமாக ஓட்டு பெற்றால், இதன் பின் எந்த கட்சி அதிக ஓட்டு பெற்றதோ அவர்கள் வென்றதாக அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். இதற்கு நோட்டா வைக்க வேண்டிய தேவையில்லை. இந்த கேள்விக்கான பதில் கிடைக்காமலே உள்ளது. இதற்கான பதிலை ஐகோர்ட் தான் கூற வேண்டும். இவ்வாறு தமிழரசன் கூறினார்.