புதுச்சேரி சிறுமி பாலியல் பலாத்கார கொலை வழக்கில் கைதான நபர் சிறையில் துாக்கு போட்டு தற்கொலை
புதுச்சேரி : புதுச்சேரியில் 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைதான நபர், காலாப்பட்டு மத்திய சிறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.புதுச்சேரியைச் சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த மார்ச் 2ம் தேதி மாயமானார். 3 நாட்கள் கழித்து, கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கழிவுநீர் வாய்க்காலில் துணியில் சுற்றப்பட்ட நிலையில் சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. மருத்துவ பரிசோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இச்சம்பவம் புதுச்சேரியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சோலை நகர் காக்கா (எ) கருணாஸ், 19; அரிகிருஷ்ணன் (எ) விவேகானந்தன், 57; ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். சிறுமி கொலையை கண்டித்து, புதுச்சேரி முழுதும் பொதுமக்கள் தன்னெழுச்சியாக பல இடங்களில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர்.காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்ட கருணாஸ், விவேகானந்தனை விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால், சிறையில் இருந்தபடியே இருவரையும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்கு விசாரணைக்கு ஆஜராகி வந்தனர்.சிறையில் உள்ள கருணாஸ், விவேகானந்தன் இருவரும் நான்கு மாதத்திற்கு பிறகு, கடந்த 27ம் தேதி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு, புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டனர். இருவர் மீதும் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கப்பட்டது. இருவரும் அதனை மறுத்தனர். அடுத்த விசாரணை இன்று 17ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள யார்டில் தனி அறையில் கைதிகள் விவேகானந்தன், கருணாஸ் மட்டும் அடைக்கப்பட்டு இருந்தனர். நேற்று அதிகாலை 5:15 மணிக்கு, தனி அறையின் கழிப்பறை பகுதிக்கு மேல் உள்ள கதவு கம்பியில் தனது துண்டால் விவேகானந்தன் துாக்கு போட்டுக்கொண்டார்.சத்தம் கேட்டு கருணாஸ் கூச்சலிடவே, வார்டன்கள் ஓடி வந்தனர்.விவேகானந்தனை மீட்டு அருகில் உள்ள பிம்ஸ் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து, வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.சிறையில் விசாரணை கைதி தற்கொலை செய்து கொண்டதால், மாஜிஸ்ரேட் விசாரணை நடந்து வருகிறது.மார்ச் 5ம் தேதி கைது செய்யப்பட்ட விவேகானந்தன், சிறையில் இருமுறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனால், அவரை கண்காணிக்க, விசாரணை கைதி கருணாசையும் விவேகானந்தன் அறையில் அடைத்து வைத்தனர்.ஆனால், கருணாஸ் துாங்கிக் கொண்டிருந்தபோது, விவேகானந்தன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மாஜிஸ்திரேட் விசாரணை
கைதி விவேகானந்தன் தற்கொலை செய்துகொண்டது குறித்து சிறை கண்காணிப்பாளர் பாஸ்கரன், காலாப்பட்டு போலீசில் புகார் அளித்தார். சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா, எஸ்.பி., லட்சுமி சவுஜன்யா, இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார், விவேகானந்தன் தற்கொலை செய்து கொண்ட சிறை அறையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.சிறையில் கைதி தற்கொலை என்பதால், மாஜிஸ்திரேட் விசாரணைக்கு போலீசார் நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்தனர். இன்று 17ம் தேதி மாஜிஸ்திரேட் சிறை வளாகத்தில் விசாரணை நடத்திய பின்பு, விவேகானந்தன் உடல் ஜிப்மருக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை நடக்க உள்ளது.