நவீன தொழில்நுட்பம் மூலம் தரமான குடிநீர் அரசு செயலர்களுடன் அமைச்சர் ஆலோசனை
புதுச்சேரி: புதுச்சேரியில் நவீன தொழில்நுட்பத்தின் மூலம், தரமான குடிநீர் வழங்க, அமைச்சர் லட்சுமி நாராயணன், அரசு செயலர்களோடு ஆலோசனை மேற்கொண்டார். புதுச்சேரியில் வவுச்சர் மற்றும் தினக்கூலி ஊழியர்களின் பிரச்னைகளை தீர்ப்பது மற்றும் நிர்வாக சிக்கல்களுக்கு தீர்வு காண, நேற்று சட்டசபை வளாகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.இதில் விடுபட்ட, 119 வவுச்சர் ஊழியர்களை தினக்கூலி ஊழியர்களாக சேர்ப்பது, வவுச்சர் ஊழியர்களின் சம்பள உயர்வு பிரச்னை மற்றும் வாரிசுதாரர்களுக்கு அரசுப்பணி, தினக்கூலி ஊழியர்களின் பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இது ஒருபுறம் இருக்க, 'வாட்டர்கொஸ்ட்' என்ற நிறுவனம், கடந்த, 40 ஆண்டு கால ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவால் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மூலம், புதுச்சேரியில் குடிநீர், நீர்ப்பாசனம் மற்றும் தொழில்துறை பயன்பாட்டிற்காக பரவலாக்கப்பட்ட, புதுப்பிக்கத்தக்க வற்றாத நீர் ஆதாரங்களை வரைபடமாக்க, அடையாளம் காணவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.அதுமட்டுமின்றி, இத்தொழில் நுட்பத்தின் மூலம், 300-800 மீ., ஆழத்திற்கு இடையே உள்ள மேலோடு நீர் ஆதாரங்களை கண்டறிந்து அதில் ஆழ்துளை கிணறுகளை அமைத்து பொதுமக்களுக்கு தரமான குடிநீர் வழங்கவும், விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் தலைமை செயலர் சரத் சவுகான், நிதிச்செயலர் ஆஷிஷ் மாதோரோவ், பொதுப்பணித்துறை செயலர் ஜெயந்த் குமார் ரே, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.