மும்மொழி கொள்கையை ஆதரித்தால் முதல்வருக்கு மக்கள் பாடம் புகட்டுவர் எதிர்கட்சி தலைவர் சிவா ஆவேசம்
புதுச்சேரி: இந்தி மொழியை ஆதரிக்கும் புதுச்சேரி அரசினை கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், காங்., எம்.எல்.ஏ.,க்கள் வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.எதிர்க்கட்சி தலைவர் சிவா கூறியதாவது:சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை மக்கள் ஓரணியில் நின்று எதிர்த்து வருகின்றனர். சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாதிரி தேர்வில் 85 சதவீத மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை கண்டிப்பாக ஏற்கமாட்டோம் என, உறுதியாக இருக்கிறார். புதுச்சேரி அரசு சிவப்பு கம்பளம்போட்டு வரவேற்கிறது. சமக்ர சிக் ஷா திட்டத்தில் மத்திய அரசு ரூ. 39 கோடி அளித்துள்ளது. அதன் மூலம் கல்வி மேம்பாடு ஏதும் நடக்கவில்லை.தமிழ் மொழியை மறைத்து மாற்று மொழியை மாணவர்களிடம் திணிக்க முயற்சிக்கின்றனர். இதற்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால் அமைச்சர் அராஜகமாக அமல்படுத்துவோம் என்கிறார். இதனை கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளோம். ஆட்சி அதிகாரத்தில் மும்மொழிக் கொள்கையை திணிக்க நினைக்கின்றனர். முதல்வர் மும்மொழிக் கொள்கையை ஆதரித்தால், அவருக்கும் சட்டசபை தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவர்' என்றார்.
அமைச்சர் ஆணவம்
எதிர்க்கட்சி தலைவர் சிவா பேசுகையில், 'புதுச்சேரியில் திணிக்கப்பட்ட சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவோம் என, ஆணவத்துடன் அமைச்சர் நமச்சிவாயம் பதிலளித்துள்ளார். அமைச்சர் ஜனநாயகத்தை கொச்சைப்படுத்தி இருக்கிறார். அதற்கு இரு அமைச்சர்கள் வக்காலத்து வாங்கி பேசுகின்றனர். இது சபை மரபை மீறும் செயல்' என்றார்.