கொடி கம்பம் அகற்றியதை கண்டித்து பா.ம.க., மறியல்
புதுச்சேரி: பா.ம.க., கொடி கம்பம் அகற்றப்பட்டதை கண்டித்து, அக்கட்சியினர் மரப்பாலம் சந்திப்பில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.புதுச்சேரி - கடலுார் சாலையில் மரப்பாலம் பஸ் நிறுத்தம் மின்துறை அலுவலகம் எதிரிலும், வேல்ராம்பட்டு சாலை சந்திக்கும் இடம் அருகே பா.ம.க., கொடி கம்பம் அமைக்கப்பட்டு இருந்தது. இதனை நேற்று காலை பொதுப்பணித்துறையினர் இடித்து அகற்றினர்.பா.ம.க., கொடி கம்பம் அகற்றப்பட்டதை கண்டித்து அக்கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் கணபதி தலைமையில், மரப்பாலம் சந்திப்பில் காலை 10:30 மணிக்கு திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். முதலியார்பேட்டை இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது, பா.ம.க., கொடி கம்பம் அருகில் உள்ள மற்ற கட்சிகளின் கொடி கம்பங்களை ஏன் அகற்றவில்லை. கொடி கம்பத்தை அகற்றிய பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் வர வேண்டும் என தெரிவித்தனர். மறியலில் ஈடுப்பட்டவர்களை போலீசார் குண்டு கட்டாக துாக்கி வேனில் ஏற்றிச் சென்றனர். கைது செய்யப்பட்டவர்களுடன் போலீஸ் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடந்தது.