| ADDED : மே 28, 2024 03:30 AM
அரியாங்குப்பம், : குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளங்களால் சாலைகள் குண்டும், குழியுமாக மாறியுள்ளதை துரிதமாக சீரமைக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.புதுச்சேரியில் இருந்து கடலுார் மார்க்கமாகவும், கடலுாரில் இருந்து புதுச்சேரி மார்க்கத்தில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நைனார்மண்டபம் வழியாக செல்கிறது. கடலுார் சாலையில் முருங்கப்பாக்கத்தில் இருந்து, மரப்பாலம் வரை ஆக்கிரமிப்புகள் இருப்பதால், தினமும் நைனார்மண்டபத்தில் இருந்து மரப்பாலத்தை கடக்க 15 நிமிடங்கள் ஆகிறது. பள்ளி, கல்லுாரி, வேலைக்கு செல்பவர்கள் தினமும் உரிய நேரத்திற்குள் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.முருங்கப்பாக்கத்தில் இருந்து மரப்பாலம் வழியாக குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடந்து, பள்ளங் கள் மண் கொண்டு மூடப்பட்டது. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த மழையில் தோண்டப்பட்ட பள்ளங்கள் உள்வாங்கி சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளது.அடுத்த மாதம் முதல் வாரத்தில் பள்ளிகள் திறப்பதால், இந்த சாலையில் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்படும். அதற்குள், பொதுப்பணித்துறையினர், முருங்கப்பாக்கத்தில் இருந்து மரப்பாலம் வரை துரிதமாக சாலையை சீரமைக்கும் பணியை செய்து, தோண்டப்பட்ட பள்ளங்களை மூடி தார் சாலைகள் போட்டு அகலப்படுத்த வேண்டும் என, பல்வேறு அமைப்பினர் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.