உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி - கடலுார் நான்கு வழிச்சாலை மின் டவர்கள், மண் பிரச்னையால் பணிகள் முடக்கம்

புதுச்சேரி - கடலுார் நான்கு வழிச்சாலை மின் டவர்கள், மண் பிரச்னையால் பணிகள் முடக்கம்

விழுப்புரம் : புதுச்சேரி-கடலுார் நான்கு வழிச்சாலை திட்டத்தில், மின் டவர்கள் குறுக்கீடு, ஏரி மண் தட்டுப்பாடு பிரச்னைகளில், அரசு ஒத்துழைப்பின்றி பல இடங்களில் பணிகள் முடங்கி கிடக்கிறது.விழுப்புரம்-நாகப்பட்டினம் நான்கு வழி சாலை பணிகள், நான்கு கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்டமாக விழுப்புரம்-புதுச்சேரி (எம்.என்.குப்பம்) 29 கி.மீ., சாலைப் பணி முடிந்து தற்காலிகமாக வாகனங்கள் செல்கிறது.இரண்டாம் கட்டமாக, புதுச்சேரி எம்.என்.குப்பம் முதல் கடலுார் மாவட்டம் பூண்டியாங்குப்பம் வரை 38 கி.மீ., தொலைவிலான நான்கு வழிச்சாலைப் பணிகள் நடக்கிறது. இதில், 12 கி.மீ., புதுச்சேரி பகுதியிலும், 26 கி.மீ. தமிழக பகுதியிலும் அமைகிறது. ரூ.1,588 கோடி மதிப்பில், ஒப்பந்தமிட்டு பணிகள் நடக்கிறது.

முழுவதும் பைபாஸ் சாலை

இத்திட்டத்தில், மொத்தமுள்ள 38 கி.மீ., துாரமுள்ள இச்சாலை, 33 கி.மீ., துாரத்திற்கு நிலம் கையகப்படுத்தி பைபாஸ் சாலை பணிகள் நடக்கிறது. இதனிடையே, 3 ரயில்வே பாலங்கள், சாலை குறுக்கிடும் 6 உயர் மட்ட பாலங்கள், கீழே வாகனம் செல்லும் 9 தரை கீழ் பாலங்கள், 10 சிறு பாலங்கள், மலட்டாறு, தென்பெண்ணையாறு என 2 பெரிய பால பணிகள் நடைபெற்று வருகிறது.இத்திட்டம் தொடங்கும், புதுச்சேரி எம்.என்.குப்பம் பகுதியில், மிகப்பெரிய பைபாஸ் வளைவு பாலப் பணிகள் முடிக்கப்பட்டு, தொடர்ந்து வழிச்சாலை பணிகளும் முடிந்துள்ளது. இதனிடையே மலட்டாற்று பாலம், வில்லியனூர் சாலை செல்லும் தரை கீழ் பாலங்கள், வில்லியனூர்-கரிக்கலாம்பாக்கம் பாலம், மடுகரை-தவளக்குப்பம் சாலை குறுக்கிடும் மேம்பாலம் போன்றவையும், 15 கி.மீ., தொலைவிற்கு மின்கம்பங்கள் அமைத்து தயாராகி உள்ள இச்சாலையை தற்காலிகமாக வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த இடங்களில், சைடு வாய்க்கால், சாலையோர தடுப்பு கட்டை கட்டும் பணி நடந்து வருகிறது.

கிடப்பில் போடப்பட்ட பணிகள்

இடையே மேலழிஞ்சிபட்டு பகுதி வாய்க்கால் பாலம், குமாரமங்கலம் வாய்க்கால் பாலம், வெள்ளவாரி வாய்க்கால் பாலம், சேலியமேடு வாய்க்கால் பாலம், கான்கிரீட் கட்டுமான பணிகள் 20 சதவீதம் அளவில் நடந்து கிடப்பில் போடப்பட்டுள்ளது.இதனையடுத்து பாகூரில் கன்னியகோவில் சாலை குறுக்கிடும் இடத்தில், மிக பிரமாண்டமான வளைவு மேம்பாலம் பணி நடந்து வருகிறது. அங்கு சாலை மேம்பாலத்துக்கான மைய பாலம் கட்டப்பட்டு, இருபுறமும் இணைப்பு பாலத்துக்கான, பிரமாண்ட சைடு சுவர் கட்டுமான பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.இதனையடுத்து, சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்றில் உள்ள பாலத்திற்கு மேற்கே புதிய பாலம் கட்ட பில்லர்கள் அமைத்து மேல்தளம் ஒட்ட கம்பிகள் கட்டப்பட்டு வருகிறது. பாலம் கட்டுமானத்தில் 50 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.இந்த பாலத்தில் இருந்து 5 கி.மீ., தொலைவிற்கு பைபாஸ் சாலை அமைக்க கான்கிரீட் சுவர் (ரெயின்போர்ஸ் எர்த் வால்) அமைத்து மண் கொட்டி கட்டமைப்பு பணிகள் நடந்து வருகிறது.இந்த பைபாஸ் சாலையில் சாவடி மற்றும் தோட்டப்பட்டில் கடலுார்-பண்ருட்டி சாலை குறுக்கிடும் பகுதிகளில் தரை கீழ் பாலம் கட்டுமான பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. தொடர்ந்து பைபாஸ் சாலை விழுப்புரம்-கடலுார் ரயில் பாதை வரை நீடிக்கிறது. அங்கு ரயில்வே பாலத்துக்கு இரும்பு பாலம் கட்டப்பட்டு, தற்போது அதனை இணைக்கும் இணைப்பு பால கான்கிரீட் கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கிருந்து அருகே உள்ள கெடிலம் ஆற்றுக்கான மேம்பாலம் கட்டப்பட்டு, அந்தப் பகுதியில் இணைப்பு சாலை கட்டமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் 50 சதவீதம் நடந்துள்ளது.அரசு ஒத்துழைப்பின்றி தாமதம்:புதுச்சேரி-கடலுார் இடையே 2 ஆண்டிற்கு மேலாக பணிகள் நடைபெற்று வந்த போதிலும், 60 சதவீத பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.இதுகுறித்து, இப்பணிகளை மேற்கொண்டுள்ள ஒப்பந்த நிறுவனத்தினர் கூறுகையில், முழுவதும் பைபாஸ் சாலையாக அமைப்பதால் நிலம் கையகப்படுத்துவதில் காலதாமதமாகிறது. குறிப்பாக புதுச்சேரி பகுதியில் நிலம் கையகப்படுத்தவதில் தாமதம் ஏற்பட்டது. பாகூர், கோர்க்காடு பகுதிகளில் அதி உயர் மின்னழுத்த டவர்கள் செல்வதால், அந்த இடங்களில் பணிகள் நடக்கவில்லை. அங்கு மாற்று டவர் அமைக்க நிலம் கையகப்படுத்துவதில் அரசு தரப்பில் தாமதம் நிலவுகிறது.அதேபோன்று, சாலை பணிக்கு தேவையான மண் எடுப்பதற்கு அனுமதி கிடைக்காமல் தாமதமாகிறது. கடலுார் பகுதியில் 3 ஏரிகளில் மண் எடுக்க அனுமதி கிடைக்காததால், பல இடங்களில் பணிகள் கிடப்பில் உள்ளது.ஜூனில் பணிகளை முடிக்க திட்டம்:இது குறித்து, நகாய் திட்ட இயக்குனர் சக்திவேல் கூறியதாவது: புதுச்சேரி-கடலுார் வரை நான்கு வழிச்சாலை திட்டப் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இந்த இடங்களில், சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மேம்பாலங்கள், தரை கீழ் பாலங்களுக்கான பணிகள் நடக்கிறது. 80 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் பாகூர், கோர்க்காடு போன்ற இடங்களில் குறக்கிடும் உயர் மின்னழுத்த டவர்களை மாற்றியமைக்க வேண்டியுள்ளதால், அந்த இடங்களில் பணிகள் தாமதமாகிறது. மீதமுள்ள 20 சதவீதம் பணிகள் துரிதமாக முடிக்கப்படும். ரயில்வே பாலத்துக்கான அனுமதி, டவர் லைன், மண் தேவை போன்ற காரணங்களால் பணிகள் தாமதமாகியுள்ளது. இருப்பினும், ஜூன் மாதத்தில் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Suresh Babu. K
மே 05, 2024 14:53

புதுச்சேரி - விழுப்புரம் இடையே உள்ள கண்டமங்கலம் ரயில்வே பாலம் பணி மிக மெதுவாக நடக்கிறது பார்லிமென்டில் புதுச்சேரி MP திரு வைத்தியலிங்கம் அவர்களின் கேள்விக்கு திரு நிதின் கட்கரி அவர்கள் கொடுத்த பதிலில் இந்த விழுப்புரம் புதுச்சேரி இடேயேயான பணிகள் ஜனவரி இல் முடிந்து சாலை பயன்பாட்டிற்கு வரும் என்று பதில் கூறினார் ஆனால் மே மதம் ஆகியும் இன்னும் பணிகள் நடைபெறுகின்றது இந்த பனிகள் எப்போது முடியும், பயன்பாட்டிற்கு எப்போது கிடைக்கும் மக்கள் அவதி படுகின்றனர்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை