புதுச்சேரியில் 12ல் பட்ஜெட் தாக்கல் சட்டசபை மார்ச் 10ல் கூடுகிறது
புதுச்சேரி:புதுச்சேரி சட்டசபை வரும் மார்ச் 10ம் தேதி கவர்னர் உரையுடன் கூடுகிறது. 12ம் தேதி முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.சபாநாயகர் செல்வம் கூறியதாவது:புதுச்சேரியின் 15வது சட்டசபையின் 6வது கூட்ட தொடர் வரும் மார்ச் 10ம் தேதி காலை 9:30 மணிக்கு கவர்னர் கைலாஷ்நாதன் உரையுடன் துவங்குகிறது. 11ம் தேதி கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானமும், 12ம் தேதி நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி, 2025-26ம் ஆண்டிற்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்கிறார். அதன்பின் நடக்கும் அலவல் ஆய்வுக்குழு கூட்டத்தில், சட்டசபை நடைபெறும் நாட்கள் முடிவு செய்து அறிவிக்கப்படும். இந்த அரசு பொறுப்பேற்ற பின் 2ம் முறையாக முழு பட்ஜெட் தாக்கல் செய்கிறது. கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்த நிதியில் 90 சதவீதம் செலவிடப்பட்டுள்ளது. மீதி தொகை வரும் மார்ச் 31ம் தேதிக்குள் செலவிடப்படும். புதுச்சேரி சட்டசபை காகிதம் இல்லா சட்டசபையாக மாற்றப்பட்டுள்ளது. பட்ஜெட் தாக்கல் மற்றும் பட்ஜெட் கூட்டத் தொடர் முழுதும் காகிதம் இல்லாத முறையில் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.