புதுச்சேரி: கத்தார் ஏர்வேல் நிறுவனத்தின் சேவை குறைபாட்டிற்காக ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்து புதுச்சேரி நுகர்வோர் குறை தீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி, குயவர்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் கடந்த, 2018,ம் ஆண்டு, மே மாதம் சென்னையில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் செல்வதற்காக கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு அதே ஆண்டு பிப்ரவரி மாதம் 16 ஆயிரத்து, 803 ரூபாய் செலுத்தி, டிக்கெட் முன்பதிவு செய்தார்.உடல் நிலைக் காரணமாக பயணத்தை ரத்து செய்த ஆறுமுகம், டிக்கெட்டை ரத்து செய்ய கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு இமெயில் அனுப்பினார். அதை ஏற்ற ஏர்வேஸ் நிறுவனம் அவரது டிக்கெட்டை ரத்து செய்து, அதற்கான செலவு தொகை போக மீதி தொகை 11 ஆயிரத்து 173 ரூபாயை, அனுப்புவதாக இ மெயிலில் தெரிவித்திருந்தது. ஆனால், அந்த பணம் ஆறுமுகத்திற்கு வந்து சேரவில்லை. ஆறுமுகம் அனுப்பிய வக்கீல் நோட்டீசிற்கு, பதில் அளித்த விமான நிறுவனம், பணத்தை அவரது பரிவர்த்தனை அட்டை எண்ணுக்கு அனுப்பி விட்டதாக கூறியது. ஆனால், ஏர்வேஸ் நிறுவனம் குறிப்பிட்ட அட்டை எண் தன்னுடையது அல்ல எனவும், தனக்கு பணம் வந்து சேரவில்லை என மீண்டும் ஏர்வேஸ் நிறுவனத்திடம் ஆறுமுகம் கூறினார். ஏர்வேஸ் நிறுவனத்தின் சேவைக்குறைபாட்டால், தனக்கு ஏற்பட்ட பண நஷ்டம் மற்றும் மன உளைச்சலுக்கு இழப்பீடு கோரி புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு ஆணையத்தில், வழக்குத் தொடர்ந்தார். வழக்கு விசாரணைக்கு, கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் ஆஜராகவில்லை. வழக்கை விசாரித்த ஆணைய தலைவர் முத்துவேல், உறுப்பினர்கள் கவிதா மற்றும் ஆறுமுகம் ஆகியோர், கத்தார் ஏர்வேஸ் நிறுவனம், ஆறுமுகத்தின் ரத்து செய்யப்பட்ட விமான டிக்கெட்டின், மீதி தொகை 11 ஆயிரத்து 173 ரூபாயை, ஆண்டுக்கு 12 சதவீத வட்டியுடன் செலுத்தவும், சேவை குறைபாட்டிற்காக ரூ.50 ஆயிரம் அபராதம் மற்றும் வழக்கு செலவிற்கு ரூ.10 ஆயிரத்தையும் 45 நாட்களில் வழங்க உத்தரவிட்டனர்.