சட்ட விரோத பேனர்கள் விஷயத்தில் நடவடிக்கை எடுக்க... தயக்கம்; கவர்னர், முதல்வர் அதிரடி நடவடிக்கை எடுப்பார்களா?
புதுச்சேரி : சட்ட விரோத பேனர்களை அச்சடிக்கும் பிரிண்டிங் கடைகள் மீது நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகள் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருவதால், மீண்டும் பேனர் கலாசாரம் தலைதுாக்கி வருகிறது.புதுச்சேரியில் சட்ட விரோதமாக வைக்கப்படும் பேனர்களை கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறி வருகின்றது. சட்ட விரோதமாக பேனர்களை வைப்பவர்கள் மீது போலீஸ் ஸ்டேஷன்களில் புகார் அளித்து, வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. அப்படி இருந்தும் கூட, பேனர்களை கட்டுப்படுத்த முடியாமல் மாவட்ட நிர்வாகம் திணறி வருகிறது. இதற்கு நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகள் அனுமதி இல்லாமல் பேனர்களை அச்சடிக்கும் பிரிண்டிங் கடைகள் தான் முக்கிய காரணம். ஆனால், நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகள் சட்ட விரோத பேனர்களை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.ஆறுதல் அளிக்கும் விதத்தில் வில்லியனுார், நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்துகள் மட்டுமே எச்சரிக்கை அறிவிப்பினை வெளியிட்டன.மற்ற நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்துகள் பெயருக்கு ஒரு எச்சரிக்கை கூட வெளியிடவில்லை. இதனால் அனைத்து பகுதிகளிலும் மீண்டும் பேனர் கலாசாரம் துவங்கியுள்ளது. கல்யாணம், காதுகுத்து என அனுமதி இல்லாமல் கண்டமேனிக்கு பேனர்கள் வைக்கப்பட்டு வருகின்றன.நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து விதிமுறைகளின்படி டிஜிட்டல் போர்டு, பிளக்ஸ் போர்டுக்கான பேனர்களை அடித்து தரும் நிறுவனங்களை நடத்தி வரும் உரிமையாளர்கள் தங்கள் கடைக்கு கொம்யூன் பஞ்சாயத்தில் தொழில் உரிமம் பெற வேண்டும். பேனர் அடிக்க வரும் வாடிக்கையாளர்களுக்கு அந்த பேனர் வைப்பதற்கு நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து மூலம் முறையான அனுமதி பெற்று இருந்தால் மட்டுமே அடித்து தர வேண்டும். அதற்கான அனுமதியை அந்த பேனரில் ஓரத்தில் அச்சிட வேண்டும்.இந்த வீதிமுறைகளை மீறினால் நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்து விதிகளின்படி எப்.ஐ.ஆர்., உள்ளிட்ட குற்றவியல் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், இவ்வளவு விதிமுறைகள் இருந்தும், கூட சட்ட விரோத பேனர்கள் விஷயத்தில் நகராட்சியும், கொம்யூன் பஞ்சாயத்துகள் எச்சரிக்கை கூட செய்யவில்லை.இந்த சட்ட விரோத பேனர்கள் புதுச்சேரி நகராட்சி, உழவர்கரை நகராட்சி பகுதிகளில் தான் அதிகம் உள்ளன. ஆனால் இரு நகராட்சிகளும் சட்ட விரோத பேனர்கள் விஷயத்தில் பிரிண்டிங் கடைகளுக்கு குறைந்தப்பட்ச எச்சரிக்கை கூட செய்யாமல் மவுனமாக உள்ளன. இதன் மர்மம் என்ன. சட்ட விரோத பேனர்களை விஷயத்தில் உள்ளாட்சி துறை, நகராட்சிகளே நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டும்போது, அடிமட்டத்தில் உள்ள கொம்யூன் பஞ்சாயத்துகளிடம் எப்படி நடவடிக்கை எதிர்பார்க்க முடியும். அவைகளும் அறிவிப்போடு, அதிரடி காட்டாமல் மவுனமாகஉள்ளன.பேனர்கள் அச்சடிக்கும்போது, அதன் கீழ்ப்பகுதியில் பேனர் அனுமதி அளிக்கப்பட்ட நாள், நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து அனுமதி எண், அனுமதி அளிக்கப்பட்ட அளவின் விவரம் மற்றும் அனுமதி வழங்கப்பட்ட கால அவகாசம், பேனர் தயார் செய்த கடையின் பெயர் கட்டாயம் இடம் பெற செய்ய வேண்டும். இல்லையெனில் அந்த சட்ட விரோத பேனர்களை உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும்.சட்ட விரோத பேனர்கள் விஷயத்தில், மயில் இறகுகளால் வருடி கொண்டு இருப்பது எந்த விதத்திலும் உதவதே உதவாது. சட்ட விரோத பேனர்களை பறிமுதல் செய்வதோடு, அதனை அச்சடிக்கும் பிரிண்டிங் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக அனைத்து நகராட்சிகள், கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு, கவர்னர், முதல்வர், உள்ளாட்சி துறை உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.