உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சபலிஸ்ட்களே உஷார்: இளம் பெண்ணை தேடி பணத்தை இழந்த இளைஞர்

சபலிஸ்ட்களே உஷார்: இளம் பெண்ணை தேடி பணத்தை இழந்த இளைஞர்

இணையத்தில் பல நல்ல விஷயங்கள் கொட்டி கிடக்க, சபலிஸ்ட்களே சல்லாப கனவில் கால் கேர்ள்களை தேடி அலைகின்றனர். அப்படி, இளம் பெண்களை தேடும் இளைஞர்களை குறி வைத்து சமீப காலமாக இணைய கும்பல் கைவரிசையை காட்ட துவங்கியுள்ளது.இந்த வலையில் வெளியூர் சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாமல், உள்ளூர் இளைஞர்களும் சிக்கி பணத்தை சத்தம் இல்லாமல் இழந்து வருகின்றனர். சைபர் குற்றங்களில் இருந்து நாம் தான் உஷாராக இருக்க வேண்டும். அண்மையில் நடந்த சம்பவம் இதோ...புதுச்சேரியை சேர்ந்த 36 வயதான திருமணமாகாத இளைஞர் ஒருவர், உல்லாசமாக இருக்க அழகான இளம் பெண்களை கூகுள் வழியாக இணையதளத்தில் தேடி உள்ளார். அப்போது இணையதளத்தில், புதுச்சேரியில் கால் கேர்ள் வேண்டுமா என தொலைபேசி எண்ணுடன் விளம்பரம் பளிச்சிட்டுள்ளது.குஷியான இளைஞர், அந்த எண்ணை தொடர்பு கொண்டு, 'ரொம்ப பசியோடு இருக்கேன். கால் கேர்ள் ஏதேனும் கிடைப்பார்களா? 'என அசடு வழிய கேட்டுள்ளார். மறுமுனையில் பேசிய நபர், 'உங்கள் டேஸ்ட்டுக்கு ஏற்ற அழகான கால் கேர்ள் புதுச்சேரியில் இருக்கிறார் என கூறி, சில பெண்களுடைய புகைப்படங்களை வாட்ஸ்ஆப்பில் அனுப்பியுள்ளார்.அதில் ஒரு பெண்ணின் போட்டோவை தேர்வு செய்ததும், இளைஞரின் 'லைவ் லொக்கேஷன்' (இருக்குமிடம்) இணைக்குமாறு கேட்டுள்ளனர். அதன்படி தான் இருக்கும் இடத்தை கூகுள் மூலம் பகிர்ந்துள்ளார். சிறிது நேரத்தில் மீண்டும் தொடர்பு கொண்ட நபர்கள், 'புதுச்சேரியில் உங்கள் லொக்கேஷனை உறுதி செய்து கொண்டு விட்டோம், நீங்கள் தேர்வு செய்த பெண் ரொம்ப காஸ்ட்லி, அப்பெண்ணுடன் உல்லாசமாக இருக்க 40 ஆயிரம் ரூபாய் கட்டணம், முன்பணமாக 10 ஆயிரம் ரூபாய் தர வேண்டும்' என கேட்டுள்ளனர்.அவர்கள் கூறியபடி, 10 ஆயிரம் ரூபாயை கூகுள்பே முலமாக இளைஞர் அனுப்பி உள்ளார். பின், போனில் பேசிய நபர், புதுச்சேரி நகரத்தில் உள்ள ஒரு முக்கியமான ஹோட்டலின் பெயரை சொல்லி அங்கே வர சொல்லி இருக்கின்றனர். அவர்கள் கூறியபடி, அந்த இடத்திற்கு இளைஞர் சென்றதும், மீண்டும் தொடர்பு கொண்டுள்ளனர்.'நாங்கள் தெரிவித்தபடி நீங்கள் ஓட்டல் அருகில் கரைட்டாக வந்திருக்கிறீர்கள், நாங்கள் உங்களை பார்த்து விட்டோம். அந்த ஓட்டலின் அறை எண் 9ல், நீங்கள் தேர்வு செய்த கால் கேர்ள் இருக்கிறார். போய் ஜாலியாக இருங்க, அறைக்கு செல்லும் முன் பாக்கி தொகையான 30 ஆயிரம் ரூபாயை அனுப்பினால் தான், அப்பெண் அறை கதவை உங்களுக்காக திறப்பார்' என தெரிவித்துள்ளார்.உடனடியாக கூகுள்பே மூலமாக, 30 ஆயிரம் ரூபாயை மின்னல் வேகத்தில் அனுப்பிய இளைஞர், உல்லாச கனவுகளுடன் ஓட்டலுக்குள் நுழைந்து ஓட்டமும் நடையுமாக சென்று அறை கதவை தட்டியுள்ளார். ஆனால், ஓட்டல் கதவு பூட்டியே இருந்துள்ளது. அங்கு எந்த பெண்ணும் இல்லை.அதிர்ச்சியடைந்த இளைஞர், மர்ம நபரை மீண்டும் தொடர்புகொள்ள முயற்சித்தபோது, அவரது மொபைல் எண் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளைஞர், சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்துள்ளளார்.போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், மர்ம நபர் டில்லியில் இருந்தவாறு, புதுச்சேரி இளைஞரிடம் பணம் பறித்துள்ளது தெரிய வந்துள்ளது. சுற்றுலாவிற்காக அதிகமாக தேடப்படும் ஊர்களின் பட்டியலில் புதுச்சேரி முதலிடம் பிடித்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளையும், உள்ளூர் சபலிஸ்ட்டுகளையும் குறிவைத்து சைபர் கிரைம் கும்பல் வலை விரித்து காத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்.பி., 'அட்வைஸ்'

சைபர் கிரைம் எஸ்.பி., பாஸ்கரன் கூறுகையில், 'சமூக வலைதளங்களிலும், ஆன்லைனிலும் வருகின்ற எந்த தகவலும் உண்மையானது கிடையாது. இதுபோன்ற நபர்களை தொடர்பு கொண்டு பணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம். இணைய குற்றங்களுக்கு 1930 அல்லது www.cybercrime.gov.inஎன்ற இணையதளத்தில் புகார் தெரிவிக்கலாம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ