மணக்குள விநாயகர் கோவிலில் அலறி ஓடும் பக்தர்கள்
புதுச்சேரிவாசிகள் எந்த விசேஷம் என்றாலும், மணக்குள விநாயகரை தரிசிக்காமல் எந்த சுப நிகழ்ச்சியையும் துவங்குவதில்லை. ஆனால் சமீபகாலமாக மணக்குள விநாயகர் கோவிலை தரிசிக்க செல்லும் பக்தர்கள் வெளியே வரும்போது தர்மசங்கத்திடத்திகுள்ளாகி வருகின்றனர்.இறைவனை தரிசித்துவிட்டு வெளியே வரும்போது திருநங்கைகள் சூழ்ந்து கொள்கின்றனர். தலையில் கையை வைத்து ஆசிர்வதிக்கின்றனர். அப்படி ஆசீர்வதிக்கும்போது பக்தர்கள் தங்களால் இயன்ற தொகையை காணிக்கையாக தருகின்றனர். ஆனால் இங்கு தான் பிரச்னையே எழுகிறது.உங்களுக்கு கல்யாணம் ஆகி இருக்கு. குழந்தை பொறந்திருக்கு. ஆனால் நுாறு ரூபாய் தான் காணிக்கையா தர. ஆத்தா வாயில் ஏதும் வராதபடி பார்த்து கொள்ளுமா.. 100 இல்ல... 300 ரூபாய் கொடு என்று தலை மீது வைத்த கையை எடுக்காமல் கேட்கின்றனர்.அப்படி அவர்கள் கேட்கும் பணத்தை தராவிட்டால் சாபம் விட்டுவிடுவார்களா என்று பக்தர்கள் சங்கடத்தில் நெளிகின்றனர். வேறு வழியின்றி அவர்கள் கேட்கும் பணத்தை கொடுத்துவிட்டு சாபம் இல்லாமல் தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடித்து வருகின்றனர்.சங்கடம் இல்லாமல் பக்தர்கள் கோவிலை விட்டு வெளியேற பெரியக்கடை போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.