சிறு வியாபாரிகள் போலீசில் மனு
புதுச்சேரி: கடற்கரையில் நரிக்குறவர்களுக்கு இடம் ஒதுக்க வேண்டும் என, புதுச்சேரி கடற்கரை சிறு வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து புதுச்சேரி கடற்கரை சிறு வியாபாரிகள் சங்கம் சார்பில், பெரியகடை போலீஸ் ஸ்டேஷனில் அளித்துள்ள புகார் மனு: புதுச்சேரி கடற்கரை வியாபாரிகளுக்கும், நரிகுறவர்களுக்கும் இத்தனை ஆண்டுகளாக எந்த பிரச்னையும் வந்தது இல்லை. இதற்கிடையில், புதிதாக கடை போட்ட நரிக்குறவர்களுக்கும், வியாபாரிகளுக்கும், தகராறு ஏற்பட்டது. இதில் இருதரப்பினர் மீதும் வழக்குப் போடப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி சிலர் பிரச்னையை பெரிதாக்க முயற்சிக்கின்றனர். போலீசார் நேரில், வந்து விசாரித்து, நரிக்குறவர்களுக்கு இடம் ஒதுக்கி அவர்களின் வாழ்வாதாரத்ததையும் பாதுகாக்க வேண்டும். வியாபாரிகளுக்கும், நரிக்குறவர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.