| ADDED : மே 24, 2024 04:16 AM
புதுச்சேரி: கனகன் ஏரியில் வீட்டு கழிவுகள் கலப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.புதுச்சேரி திலாசுப்பேட்டையில், கடந்த 2017 ம் ஆண்டு கழிவுநீர் விடப்பட்டும், ஆகாயத்தாமரை செடிகள் மண்டியும் இருந்த கனகன் ஏரி, கவர்னர் கிரண்பேடியின் நடவடிக்கையால் பொலிவு பெற்றது. அதன் பிறகு சரிவர பராமரிப்பு இல்லாமல் மீண்டும் ஆகாயதாமரை பிடியில் சிக்கி பொலிவு இழந்தது.தற்போது கனகன் ஏரி பொதுப்பணித் துறையின் நடவடிக்கையால் ஆகாயதாமரைகள் அகற்றப்பட்டு ரம்மயமாக காட்சியளிக்கின்றன. இதன் காரணமாக கனகன் ஏரியில் காலை மாலையில் வாக்கிங் செல்வது அதிகரித்துள்ளது.ஆனால், இந்த ஆரோக்கிய சூழ்நிலையை சீர்குலைக்கும் வகையில், கடந்த சில நாட்களாக வீட்டு கழிவுகளிலும் குறிப்பாக செப்டிக் டேங்க் கழிவுகள் கனகன் ஏரியில் விடப்படுகின்றது.இதனால் அழகாக காட்சியளிக்கும் கனகன் ஏரி துர்நாற்றம் வீசுகிறது. தண்ணீரும் நிறம் மாறியுள்ளது.இதன் காரணமாக வாக்கிங் செல்லும் பொதுமக்கள் முகம் சுளித்தவாறு செல்லுகின்றனர்.நகர பகுதியில் படகு சவாரி செய்வதற்கு ஏற்ற இடமாக கனகன் ஏரி உள்ளது. இதனை சரி வர பராமரித்து, மீண்டும் படகு சவாரியை துவங்கினால், மாநில சுற்றுலா வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இதற்கான பணிகளை பொதுப்பணித் துறை நீர்பாசன கோட்டத்துடன் இணைந்து, சுற்றுலா துறை, சுற்றுலா வளர்ச்சி கழகம் முன்னெடுக்க வேண்டும். கனகன் ஏரியில் வீட்டு கழிவுகள் கலப்பதை முற்றிலும் தடுத்து நிறுத்தவேண்டும்.