மொழியியல் பண்பாட்டு மைய கட்டடத்தை வேறு துறைக்கு மாற்ற தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு
புதுச்சேரி: மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் கட்டடத்தை வேறு துறைக்கு மாற்ற கூடாது என்று போர்க்கொடி உயர்த்தியுள்ளனர் புதுச்சேரியில் மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் 1986 ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. கலை பண்பாட்டுதுறையின் கீழ் செயல்படும் இந்நிறுவனம்,மாநிலத்தில் உள்ள கவிஞர்கள், மானிடவியல், இலக்கியம், பண்பாட்டு தளங்களை ஆய்வு செய்து, ஆவணப்படுத்துவதை முக்கிய இலக்காக கொண்டு செயலாற்றி வருகிறது. அத்துடன், எம்.பில்., பி.எச்.டி. படிப்புகளையும் நடத்தி, ஆய்வாளர்களுக்கு பட்டங்களை வழங்கி வருவதோடு, பிற மாநிலத்தவர் மற்றும் நாட்டினருக்கு தமிழ் கற்பிக்கப்படுகிறது. ஏற்கனவே பள்ளி கல்வித் துறையின் மாவட்ட ஆசிரியர் பயிற்சி மையத்திற்கு சொந்தமாக இருந்த இந்த இடம் மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்திற்கு முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. இங்கு பல கோடி செலவு செய்து மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் ஏற்படுத்தப்பட்டது. இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி மையம் சரிவர செயல்படாத நிலையில் அக்கட்டடத்தை மீண்டும் பள்ளி கல்வித் துறை கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது. மீண்டும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திற்கு கூடுதல் வகுப்பறைகளை ஏற்படுத்த பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்கு தமிழ் அமைப்புகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.நேற்று தமிழ் அமைப்பினர் முனைவர் வேல்முருகன் தலைமையில், சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி மைய கட்டடத்தை பள்ளி கல்வி துறைக்கு மீண்டும் மாற்றக்கூடாது என்று முறையிட்டு மனு அளித்தனர்.இது குறித்து தமிழ் அமைப்பினர் கூறும்போது, பேராசிரியர் பணியிடங்கள் நிரம்பாததால் கடந்த சில ஆண்டுகளாக மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி மையத்தில் மாணவர் சேர்க்கை நடக்கவில்லை. இப்போது தான் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதுபோன்ற சூழ்நிலையில் மொழியியல் பண்பாட்டு கட்டடத்தை பள்ளி கல்வித் துறை மாற்றினால் சிக்கல் ஏற்படும். ஒட்டுமொத்தமாக மொழியியல் பண்பாட்டு மையம் மூடுவிழா கண்டுவிடும். எந்த மாணவர் சேர்க்கையும் எதிர்காலத்தில் நடக்காது. இதன் காரணமாகவே எதிர்ப்பு தெரிவிக்கின்றோம். எனவே இந்த முடிவினை அரசு கைவிட வேண்டும் என்றனர்.