உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாணவிக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியர் போக்சோவில் கைது

மாணவிக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியர் போக்சோவில் கைது

அரியாங்குப்பம் : பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியரை, போக்சோ சட்டத்தில், போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.புதுச்சேரி, தவளக்குப்பம் அடுத்த தானாம்பாளையத்தில் உள்ள செயின்ட் ஜோசப் ஆங்கில பள்ளியில், ஒன்றாம் வகுப்பு மாணவிக்கு, அங்கு பணிபுரியும் முதலியார்பேட்டையை சேர்ந்த ஆசிரியர் மணிகண்டன்,25;பாலியல் தொந்தரவு கொடுத்தார். ஆத்திரமடைந்த பொதுமக்கள், நேற்று முன்தினம், பள்ளியில் புகுந்து சூறையாடியதை தொடர்ந்து பிரச்னை கலவரமாக மாறியது. இதனால், இரண்டாம் நாளான நேற்றும் அப்பகுதியில் பதட்டம் நிலவியது.இந்த சம்பவத்தை கண்டித்து புதுச்சேரி மற்றும் தமிழகத்தை சேர்ந்த 18 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் புறக்கணித்தனர். மேலும், மீனவ பஞ்சாயத்தார்கள் சார்பில் நல்லவாடு கிராமத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், பல்வேறு சமூக அமைப்பினர், பொதுமக்கள், எஸ்.பி.,க்கள் பக்தவச்சலம், வீரபல்லவன் உட்பட போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மணிகண்டனுக்கு துாக்கு தண்டனை வழங்க வேண்டும். பள்ளி தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிக்கு பள்ளி நிர்வாகம், ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். மாணவியின் பெற்றோரை தாக்கிய போலீசார், சப் இன்ஸ்பெக்டரை, பணி நீக்க செய்ய வேண்டும். இதற்கு முன்பு மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் ரீதியாக தொல்லை இருந்துள்ளதா என சி.சி.டி.வி., மூலம் ஆய்வு செய்து விசாரணை நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.இதுகுறித்து, வீராம்பட்டினம் மக்கள் குழுவை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் விஸ்வநாதன், நாங்கள் வைக்கும் கோரிக்கை மீது அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், போராட்டம் நடத்துவோம் என்றார்.இந்நிலையில், புதுச்சேரி குழந்தைகள் நல அமைப்பு சார்பில் கொடுத்த புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார், போக்சோ சட்டம், பிரிவு 6ன் கீழ் வழக்கு பதிந்து, ஆசிரியர் மணிகண்டனை, கைது செய்து, நேற்று மாலை கோர்ட்டில், ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.இப்பிரச்னை தொடர்பாக பதட்டம் நிலவி வருவதை தொடர்ந்து தவளக்குப்பம் நான்கு முனை சந்திப்பு, பள்ளி மற்றும் நல்லவாடு ஆகிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாணவிகள் நோட்டில் ஆபாச வார்த்தைகள்

கைது செய்யப்பட்ட ஆசிரியர், பாதிக்கப்பட்ட மாணவிக்கு தொடர்ந்து, பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும் போது, மாணவிகளின்நோட்டில், ஆபாச வார்த்தைகள் எழுதியதும், போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !