| ADDED : ஆக 10, 2024 04:47 AM
புதுச்சேரி: புதுச்சேரி மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவக்கல்லுாரிக்கு, 'சிறந்த பல் மருத்துவக்கல்லுாரி'க்கான விருது வழங்கப்பட உள்ளது.அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு பியரி பவுச்சர் அகாடமி இயங்கி வருகிறது. இந்த அகாடமி, 2024ம் ஆண்டு சிறந்த பல் மருத்துவக்கல்லுாரிகளுக்கான விருதுகளை அறிவித்துள்ளது. அகில இந்திய அளவில் சிறந்த பல் மருத்துவக்கல்லுாரிக்கான விருதை பெறுவதற்கு கோரிமேட்டில் உள்ள மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவ நிறுவனம் முதன்முறையாக தேர்வு செய்யப் பட்டுள்ளது.உத்தரபிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலையில் வரும், ஆக., 17ம் தேதி நடக்கும் விழாவில், இந்த விருதை பெற்றுக்கொள்ள மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவ நிறுவனத்தின் முதல்வர் கென்னடி பாபுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.இது குறித்து கல்லுாரி முதல்வர் கென்னடி பாபு கூறியதாவது:கடந்த, 1990ம் ஆண்டு துவங்கப்பட்ட இக்கல்லுாரியில், புதுச்சேரி மற்றும் தமிழக மக்களுக்கான வாய், தாடை, மற்றும் பல் மருத்துவ சிகிச்சை சிறந்த முறையில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இளநிலை மற்றும் முதுநிலை பல் மருத்துவ மாணவர்களுக்கு சிறந்த முறையில் பல் மருத்துவம் பயிற்றுவிக்கப்படுகிறது.இக்கல்லுாரி புதுச்சேரி முதல்வரை தலைவராக கொண்டது. அவர் வழிகாட்டுதலில், முழுமையாக புதுப்பிக்கப்பட்டு சிறந்த முறையில் உலகத்தரம் வாய்ந்த அதி நவீன உபகரணங்கள் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மேலும் இக்கல்லுாரியில் மூத்த குடிமக்களுக்கான, சிறப்பு பிரிவு விரைவில் துவங்கப்பட உள்ளது. இங்கு மூத்த குடிமக்கள் ஒரே இடத்தில் அனைத்து பல் மருத்துவ சேவைகளையும் பெற முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.