| ADDED : ஜூலை 26, 2024 04:07 AM
புதுச்சேரி: சொத்து பிரச்னையில் மாடிப்படிகளை அண்ணன் இடித்து தள்ளியதால் தம்பியின் குடும்பத்தினர் 10 மணி நேரம் முதல் தளத்தில் பரிதவித்தனர். தீயணைப்பு வீரர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.லாஸ்பேட்டை, கொட்டுப்பாளையம் மெயின்ரோடு-மாரியம்மன் கோவில் சந்திப்பு முனையில் முதல் தளத்துடன் கூடிய வீடு உள்ளது. இந்த வீட்டு கீழ்தளத்தில் 60 வயதான அண்ணன் வசிக்கிறார். மேல் தளத்தில் அவருடைய 55 வயதான தம்பி இளங்கோ, குடும்பத்துடன் வசித்து வருகின்றார்.அண்ணன், தம்பி இடையே நீண்ட காலமாக சொத்து பிரச்னை இருந்து வருகிறது. அடிக்கடி இருவரும் தகராறில் ஈடுபட்டு வந்தனர். இருவருக்கும் பேச்சுவார்த்தை இல்லாத நிலையில் தம்பி குடும்பத்தினர் மாரியம்மன் கோவில் தெரு மாடிப்படி வழியை பயன்படுத்தி வந்தனர். கொட்டுப்பாளையம் மெயின் ரோட்டு வழியினை அவரது அண்ணன் குடும்பத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை 7:30 மணியளவில் தம்பி குடும்பத்தினர் செல்லும் மாடிப்படிகளை அண்ணன் குடும்பத்தினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இடித்து தள்ளினர். இதனால் தம்பி குடும்பத்தினர் மேல்தளத்தில் சிக்கினார். வெளியே செல்ல முடியாமல் பரிதவித்தனர். தொடர்ந்து, மாலை 5:30 மணியளவில் உறவினர் மூலமாக கோரிமேடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஏணி மூலம் அனைவரையும் பத்திரமாக மீட்டனர். இச்சம்பவம் குறித்து கோரிமேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.போலீசார் கூறுகையில், 'வீடு பழமையாக இருக்கிறது. அதனால் இடித்தேன் என்று அண்ணனும், நன்றாக உள்ள வீட்டினை இடித்துவிட்டு எங்களை அப்புறப்படுத்த முயற்சி நடப்பதாக தம்பியும் கூறி வருகின்றனர். இருப்பினும் வீட்டு மாடிப்படிகளை இடித்து, கீழே வர முடியாதப்படி தள்ளுவது சட்டப்படி குற்றம். நில விவகாரம் என்பதால் ஆவணங்களை சரிபார்த்து, அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.