| ADDED : மே 10, 2024 01:33 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் மூன்று நாட்கள் நடக்கும் கம்பன் விழாவை கவர்னர் ராதாகிருஷ்ணன் இன்று துவக்கி வைக்கிறார்.புதுச்சேரியில் 57 வது கம்பன் விழா இன்று 10 ம்தேதி துவங்கி,12ம் தேதி வரை கம்பன் கலையரங்கில் நடக்கின்றது. காலை 9.30 மணிக்கு துவங்கும் விழாவிற்கு ஐகோர்ட் முன்னாள் நீதிபதி ராமசுப்பிரமணியன் தலைமை தாங்குகிறார்.கம்பன் கழக புரவலர், முதல்வர் ரங்கசாமி வரவேற்கிறார். கவர்னர் ராதாகிருஷ்ணன் விழாவை துவக்கி வைத்துப் பேசுகின்றார். தொடர்ந்து விழா மலர் வெளியீடு,சிறந்த தமிழ் புலவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றது.பரிசுகளை சபாநாயகர் செல்வம் வழங்கி பாராட்டுகிறார்.அதை தொடர்ந்து புதுச்சேரி கம்பன் கழகம் சார்பில் தயாரிக்கப்பட்ட கம்ப ராமாயண புத்தகத்தை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிடுகிறார்.இதனை தொடர்ந்து வக்கீல் முருகேசன்-பானுமதி அறக்கட்டளை சார்பில் பரிசுகளை அமைச்சர் லட்சுமிநாராயணன் வழங்குகிறார்.கம்பவாணர் புலவர் அருணகிரி அறக்கட்டளையின் கம்பன் ஆய்வு நுால் பரிசுகளை அமைச்சர் தேனீஜெயக்குமார்,கம்பன் கழக போட்டியில் வெற்றவர்களுக்கு அமைச்சர்கள் சாய்சரவணன்குமார்,திருமுருகன்,வைத்திலிங்கம் எம்.பி., அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.,வழங்குகிறார்.இன்றைய கம்பன் விழா நிகழ்ச்சிகள்:காலை 11.30 மணிக்கு நடக்கும் எழிலுரையில்,ஒன்றே என்னின் ஒன்றே ஆம் என்ற தலைப்பில் பாரதி கிருஷ்ணகுமார் சொற்பொழிவாற்றுகிறார். மாலை 5 மணிக்கு துவங்கும் தனியுரையில் கற்றனர் ஞானம் இன்றேல் என்ற தலைப்பில் ராமலிங்கம் பேசுகிறார். மாலை 6.30 மணிக்கு உளவியல் நோக்கில் மகளிர் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடக்கின்றது.சுமதி தலைமை தாங்குகிறார்.சீதையின் உறுதி என்ற தலைப்பில் குருஞானம்பிகா,கோசலையின் தவிப்பு என்ற தலைப்பில் தேவிகுணசேகரன்,மண்டோதரியின் புலம்பல் என்ற தலைப்பில் கவிதா ஜவகர் ஆகியோர் பேசுகின்றனர்.ஏற்பாடுகளை கம்பன் கழக தலைவர் செல்வ கணபதி எம்.பி., செயலாளர் சிவக்கொழுந்து தலைமமையில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.