கார் மோதி குழந்தை பலி குலதெய்வம் கோவிலுக்கு வந்தபோது சோகம்
பாகூர்: தவளக்குப்பம் அருகே நேர்த்திக் கடன் செலுத்த குலதெய்வம் கோவிலுக்கு வந்த இடத்தில், ஒன்றரை வயது குழந்தை கார் மோதி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.நாகப்பட்டினம் மாவட்டம், வெளிப்பாளையம், முனிசிபல்பேட்டை பகுதியை சேர்ந்தவர் இருசப்பன், 30. மீன்பிடி துறைமுகத்தில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி இந்துமதி, குழந்தை மற்றும் உறவினர்களுடன், புதுச்சேரி தவளகுப்பம் அடுத்த அபிஷேகப்பாக்கம் கிராமத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு நேர்த்தி கடன் செலுத்துவதற்காக நேற்று மதியம் வந்தனர்.வழிபாட்டுக்கான வேலைகளை அவரது குடும்பத்தினர் செய்து கொண்டிருந்தனர். அப்போது பூஜைக்கு தேவையான சில பொருட்களை வாங்குவதற்காக இருசப்பன் சகோதரர் மாரியப்பன், 38, என்பவர் கடை வீதிக்கு செல்வதற்காக இனோவா காரை பின்புறமாக இயக்கியுள்ளார். அப்போது, அங்கிருந்த இருசப்பனின் ஒன்றரை வயது குழந்தை தர்ஷித் மீது கார் மோதியது.இதில், படுகாயமடைந்த குழந்தையை தவளக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர் மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்தார்.குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அங்கிருந்த ஆம்புலன்சை கேட்டுள்ளனர். ஆம்புலன்ஸ் டிரைவர் இல்லை என, மருத்துவமனை ஊழியர்கள் கை விரித்து விட்டனர். இதையடுத்து, அவர்கள் காரிலேயே குழந்தையை ஜிப்மருக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.விபத்து குறித்து கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.