| ADDED : ஜூன் 13, 2024 05:54 AM
புதுச்சேரி, : மேரி கட்டடத்தில் நகராட்சி சிறப்பு பணி அதிகாரி, நகராட்சி ஆணையர் அலுவலகங்கள் இடம் மாற்றப்பட்டன.புதுச்சேரி கடற்கரையில் அமைந்திருந்த மேரி கட்டடம் மிக பழமை வாய்ந்தது. இக்கட்டடம், கடந்த 1870-71ம் ஆண்டுகளில் பிரெஞ்சு ஆட்சியின்போது, பிரெஞ்சு கட்டடக் கலை நயத்துடன் கட்டப்பட்டது. இந்த பிரமாண்ட கட்டடத்தில் புதுச்சேரி நகராட்சி அலுவலகம் இயங்கி வந்தது. போதிய பராமரிப்பு இல்லாததால் கட்டடம் பழுதடைந்தது. கடந்த 2014ம் ஆண்டு கட்டடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது.கடந்த 2017ம் ஆண்டு, திட்ட அமலாக்க முகமை மூலமாக, ரூ.14.83 கோடி செலவில் கட்டுமான பணிகள் துவங்கியது. 690 சதுர மீட்டர் பிரதான கட்டடம், தரைத்தளம், முதல் தளம், கருத்தரங்கு கூடம், திருமண பதிவு அறைகள் என பாரம்பரிய பழைய கட்ட பாணியில் கட்டி முடிக்கப்பட்டது.மேரி கட்டடத்தில் நகராட்சி சிறப்பு பணி அதிகாரி நகராட்சி ஆணையர் அலுவலகங்கள் இடம் மாற்றப்பட்டன. நேற்று உள்ளாட்சி துறை இயக்குனரும் நகராட்சி சிறப்பு பணி அதிகாரியுமான சக்திவேல், நகராட்சி ஆணையர் கந்தசாமி ஆகியோர் மேரி கட்டடத்தில் அமர்ந்து தங்களது பணிகளை கவனித்தனர். மேரி கட்டடத்திற்கு தற்போது தற்காலிக மின் இணைப்பு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. நிரந்தர மின் இணைப்பு கொடுத்ததும், மற்ற பிரிவின் அலுவலகங்கள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக இடமாறுகின்றன.