உப்பனாறு மேம்பாலம் டெண்டர்: முதல்வர், அமைச்சர் ஆலோசனை
புதுச்சேரி : உப்பனாறு மேம்பாலம், தற்காலிக கவர்னர் அலுவலகம், தேங்காய்திட்டு துறைமுகம் உள்ளிட்ட டெண்டர் பணிகள் தொடர்பாக முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் மற்றும் துறைசெயலர், தலைமை பொறியாளருடன் ஆலோசனை நடத்தினார்.புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறையில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ள பணிகள் குறித்த விவரங்களை பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், துறை செயலாளர் ஜெயந்தகுமார் ரே, தலைமைப் பொறியாளர் தீனதயாளன் முதல்வர் ரங்கசாமியிடம் விளக்கினர்.உப்பனாற்றின் மீது கட்டி முடிக்காமல் இருந்த மேம்பாலத்தின் மீதமுள்ள பணிகளை மேற்கொள்வதற்கு 26.40 கோடி ரூபாய் மதிப்பில் கட்டுவதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இந்தப் பணியின் மூலம் ஏற்கனவே தொடங்கப்பட்டு முடிக்கப்படாமல் இருக்கும் பாலத்தின் பகுதிகளையும் காமராஜர் சாலையில் உள்ள பழைய பாலத்தை இடித்து விட்டு புதிதாக கட்டவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பணியினை 12 மாதங்களுக்குள் செய்து முடிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.அதுபோல் கவர்னர் மாளிகை தற்காலிக அலுவலகம் மற்றும் இல்லம் கட்டும் பணிக்கான ஒப்பந்தபுள்ளி ரூபாய் 3.69 கோடி மதிப்பீட்டில் கோரப்பட்டுள்ளது. இந்தப்பணி ஏற்கனவே சுற்றுலாத்துறையால் பழைய சாராய ஆலை வளாகத்தில் கட்டப்பட்ட கட்டடத்தில் கவர்னர் தற்காலிக அலுவலகம் மற்றும் இல்லத்திற்கான தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளது .இந்தப் பணியினை 4 மாதங்களுக்குள் முடிக்க அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய ரூபாய் 46.16 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள பணிக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. இப் பணி விரைவில் துவங்க உள்ளது. இதனை 12 மாதங்களுக்குள் முடிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த துறைமுக விரிவாக்கத்தின் மூலம் மீன்பிடி படகுகள் கரைக்கு வந்து மீன்களை இறக்க ஏற்ற வசதியாகவும் வலைகளை உலர்த்தி செப்பனிடவும் புயல் மற்றும் பேரிடர் காலங்களில் விசைப்படகுகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்கும், புதுச்சேரி மீனவர்கள் சிரமமின்றி தங்கள் தொழிலை செய்வதற்கு உதவியாகவும் இருக்கும் இங்கு மீன்கள் ஏலக்கூடம் , உணவு விடுதி, கழிப்பறை வசதிகள், விசைப்படகுகள் செப்பனிடும் கூடம் ஆகியவை ஏற்படுத்தப்படவுள்ளன என, தெரிவித்தனர்.விவரங்களைக் கேட்டறிந்த முதல்வர், பணிகளை தொய்வில்லாமல் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவருமாறு கேட்டுக்கொண்டார்.