அனுமதியின்றி பேனர் அச்சடிக்கும் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை
பாகூர்: அனுமதி இல்லாமல் பேனர் அச்சடிக்கும் நிறுவனத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் எச்சரிக்கை விடுத்தார்.இது குறித்து, ஆணையர் ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; பாகூர் கொம்யூன் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் டிஜிட்டல் பேனர் மற்றும் பிளக்ஸ் போர்டுகள் அச்சடித்து தரும் நிறுவனங்களின் உரிமையாளர்கள், கொம்யூன் பஞ்சாயத்து மூலம் தொழில் உரிமம் பெற வேண்டும்.தங்கள் கடைகளுக்கு பேனர் அச்சடிக்க வரும் வாடிக்கையாளர்கள், தங்களின் பேனர்களை நிறுவி கொள்ள கொம்யூன் பஞ்சாயத்து மூலம் முறையான அனுமதி பெற்று இருந்தால் மட்டுமே பேனர் அச்சடித்து தர வேண்டும்.அதற்கான அனுமதியை தங்கள் அச்சடிக்கும் பேனர் ஓரத்தில் பதிவிடவேண்டும். இல்லையெனில் நடைமுறையில் உள்ள கொம்யூன் பஞ்சாயத்து விதி -1973-ன் படி தங்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.