| ADDED : ஜூன் 19, 2024 05:31 AM
புதுச்சேரி, : வரும் பட்ஜெட் வளர்ச்சிக்கானதாக இருக் கும் என எதிர்பார்க்கிறோம் என எதிர்க்கட்சித்தலைவர் சிவா தெரிவித்துள்ளார். புதுச்சேரி கவர்னர் ராதாகிருஷ்ணன் தலைமையில், தலைமைச் செயலகத்தில் நேற்று, மாநில திட்டக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா கூறியதாவது:மத்திய அரசின் திட்டத்தில் ரூ. 650 கோடியில் ரூ. 200 கோடி தான் வேலை செய்துள்ளனர். மீதமுள்ள, ரூ. 400 கோடி செலவு செய்யவில்லை. மாநில நலத்திட்டங்களுக்கு ரூ.1000 கோடி செலவு செய்யப்படுகிறது எனில், அதற்கு வட்டிக்கு மட்டும், ரூ. 2,500 கோடி கட்டப்படுகிறது. குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 3 ஆண்டு களுக்கு முன் துவங்கப்பட்ட ஏ.எப்.டி., திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆற்றுப்படுகையில் இருந்து குடிநீர் கொண்டு வர நடவ டிக்கை இல்லை. அதிக வருவாய் ஈட்டித்தரும் துறைமுகம் தனியாருக்கு தாரை வாக்கப்பட்டுள்ளது.ரூ. 1,260 கோடி லாபம் ஈட்டியிருக்கக் கூடிய மின்துறையை தனியாருக்கு தாரைவார்க்க நினைப்பதும், மின் கட்டணத்தை உயர்த்துவதும் ஏற்புடையதல்ல. இந்த பட்ஜெட்டில் ரேஷன் கடை இயங்குகின்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.சிறப்புக்கூறு திட்டத்தில் முழு பணத்தையும் மக்களுக்கு செலவு செய்யப்படவில்லை. இதுபோன்று மாநில வளர்ச்சிக்கான பல்வேறு கோரிக்கைகளை திட்டக்குழு கூட்டத்தில் முன்வைத்தேன். அதனால் வரும் பட்ஜெட் புதுச்சேரியின் வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். இதை நாங்கள் அரசியலாக பார்க்கவில்லை. அது ஆட்சியாளர்களின் செயல்பாட்டில் தான் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.