| ADDED : ஜூன் 23, 2024 05:15 AM
கடந்த வாரம், பா.ஜ., - என்.ஆர். காங்., எம்.எல்.ஏ.,க்களுக்கு முதல்வர் ரங்கசாமி திடீரென விருந்து அளித்தார். சின்ன வீராம்பட்டினத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நடந்த இந்த விருந்தில் இரண்டு கட்சிகளை சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டனர்.முதல்வர் ரங்கசாமி எதற்காக திடீரென விருந்து வைக்கிறார், தேர்தல் தோல்வியை தொடர்ந்து அரசியல்ரீதியாக முக்கிய ஆலோசனைகளை கேட்க போகிறாரா என இரண்டு கட்சி எம்.எல்.ஏ.,க்களும் ஆவலுடன் முதல்வரின் முகத்தையே பார்த்தவாறு உணவருந்தினர். ஆனால், ரங்கசாமி கடைசிவரை எதுவும் கூறவில்லை.ஆனால், விருந்தில் பங்கேற்ற அமைச்சர் நமச்சிவாயம் சகஜமாக மற்றவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அவர் கூறும்போது, ''எனக்கு நேரம் சரியில்லை. எனது ராசியில் அஷ்டமத்தில் (எட்டாம் இடம்) சனி உள்ளது. அதனால்தான், எவ்வளவு கடினமாக உழைத்தும் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை; தோல்வியே கிடைத்தது' என மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.இதை கேட்ட பக்கத்தில் உட்கார்ந்திருந்த எம்.எல்.ஏ.,க்கள், 'கவலைப்படாதீர்கள்; உங்களுக்கு நல்ல நேரம் விரைவில் வரும்' என ஆறுதல் கூறினர். ஒரு எம்.எல்.ஏ., 'எல்லாருக்கும் நல்ல நேரம் உண்டு... காலம் உண்டு வாழ்விலே...' என்ற பாடலை ராகத்துடன் பாட கவலையை மறந்து அனைவரும் சிரித்தனர்.