புதுச்சேரியில் 104 டிகிரி வெயில்
புதுச்சேரி : அக்னி வெயில் முடிந்த நிலையில் நேற்று புதுச்சேரியில் 104 டிகிரி வெயில் அடித்ததால் மக்கள் கடும் அவதியடைந்தனர்.இந்த ஆண்டு அக்னி நட்சத்திர நாட்களில், புதுச்சேரியில் விட்டு, விட்டு மழை பெய்தது. வழக்கமாக அக்னி நட்சத்திர காலங்களில் வெயில் வாட்டி வதைக்கும். தொடர் மழை காரணமாக வெப்பம் தணிந்து மக்கள் நிம்மதியடைந்தனர்.இந்த ஆண்டு நேற்று முன்தினம் 100.8 டிகிரி வெயில் பதிவானது. இந்நிலையில், தொடர்ந்து வெயில் அதிகரித்து வரும் நிலையில், நேற்று 104 டிகிரி வெயில் அடித்தது. இதனால், பகல் நேரங்களில் அனல் காற்று வீசியதால், பொது மக்கள் வெளியே வராமல் வீட்டிற்குள் முடங்கினர். முக்கிய சாலைகளில் வாகன போக்குவரத்து குறைந்து காணப்பட்டது. வெயில் அதிகரிப்பால், சுற்றுலா இடங்களான கடற்கரை பகுதியில் மக்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில், மாலை 6:30 மணியளவில், திடீரென கருமேகங்கள் சூழ்ந்து, குளிர்காற்று வீசியதால், மகிழ்ச்சி அடைந்தனர்.