போலி சான்றிதழில் என்.ஆர்.ஐ., ஒதுக்கீடு மேலும் 25 மாணவர்கள் சிக்கினர்
புதுச்சேரி: என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டில் போலி சான்றிதழ் மூலம் சேர்ந்த மேலும் 25 மாணவர்கள் சிக்கினர்.புதுச்சேரியில் மருத்துவ படிப்புகளுக்கு சென்டாக் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப் படுகிறது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உட்பட மருத்துவ இளநிலை படிப்புகளுக்கு சென்டாக் மூலம் 3 கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டில் பலர் போலி சான்றிதழ் சமர்பித்து சேர்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனையொட்டி, சென்டாக் அதிகாரிகள் தனிக்குழு அமைத்து, என்.ஆர்.ஐ., மாணவர்களின் சான்றிதழ்களை கடந்த 21ம் தேதி முதல் சரிபார்த்தனர். அதில், சீட் ஒதுக்கப்பட்ட 79 பேரில் 32 பேர் கலந்து கொண்டனர். அவர்களின் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து, சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள இந்திய துாதரகத்துக்கு அனுப்பி விசாரித்தனர். அதில், 11 பேரின் சான்றிதழ்கள் போலி எனத் தெரிய வந்தது. அவர்களை பட்டியலில் இருந்து நீக்கியதுடன், அவர்கள் கட்டிய ரூ. 22 லட்சத்தை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, முதல், 2-ம் கட்ட கலந்தாய்வில் என். ஆர்.ஐ., ஒதுக்கீட்டில் சேர்ந்த 42 பேரின் சான்றிதழ்களை ஆய்வு செய்ததில், இதில் மேலும் 25 மாணவர்கள் போலி சான்றிதழ் சமர்பித்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்டாக் அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.