உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இளநிலை மருத்துவ படிப்பிற்கு 2ம் சுற்று கலந்தாய்வு; பாட விருப்பம் தெரிவிக்க காலக்கெடு நீட்டிப்பு

இளநிலை மருத்துவ படிப்பிற்கு 2ம் சுற்று கலந்தாய்வு; பாட விருப்பம் தெரிவிக்க காலக்கெடு நீட்டிப்பு

புதுச்சேரி; 'நீட்' சார்ந்த இளநிலை மருத்துவ படிப்புக்கு 2ம் சுற்று கலந்தாய்விற்கு மாணவர்கள் பாட விருப்பங்களை தெரிவிக்க வரும் 12ம் தேதி வரை காலக்கெடுவை சென்டாக் நீட்டித்துள்ளது. சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன் ஷர்மா விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 'நீட் சார்ந்த இளநிலை மருத்துவ படிப்புக்கு முதல் சுற்று கலந்தாய்வு முடிவில் காலியாக உள்ள இடங்களை 2வது சுற்று கலந்தாய்வு மூலம் நிரப்ப மாணவர்கள், தங்கள் பாட விருப்பங்களை கடந்த 27ம் தேதி முதல் நேற்று 2ம் தேதி மாலை 5:00 மணிக்குள் சென்டாக் இணையதளத்தில் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், மத்திய மருத்துவ கலந்தாய்வு கமிட்டி, வெளியிட்டுள்ள மாநில கலந்தாய்விற்கான திருத்தப்பட்ட அட்டவணை அடிப்படையில், இளநிலை மருத்துவ படிப்புக்கான 2வது சுற்று கலந்தாய்விற்கு, மாணவர்கள் பாட விருப்பங்களை சமர்ப்பிக்க காலக்கெடு வரும் 12ம் தேதி மாலை 5 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்டாக்கில் முதல் சுற்று கலந்தாய்வில் 'சீட்' ஒதுக்கப்பட்டு கல்லுாரியில் சேர்ந்த மாணவர்கள், பறிமுதல் கட்டணம் இல்லாமல் அனுமதிக்கப்பட்ட இடத்தை திரும்ப பெற விரும்பினால் 11ம் தேதி மாலை 5 மணிக்குள் மாணவர்கள் டேஷ்போர்டு மூலம் தங்கள் விலகல் கடித்தை சமர்ப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு சென்டாக் இணையதளத்தை பார்வையிடவும். அல்லது மாணவர்கள் தங்களது டேஷ்போர்டில் உள்ள குறைகள் விருப்பத்தின் மூலம் கேள்விகளை சமர்ப்பிக்கலாம். அல்லது 0413-2655570, 2655571 என்ற உதவி தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !