உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காரைக்காலில் இருந்து கடல் வழியே தமிழகத்திற்கு ரூ.1 லட்சம் மதுபாட்டில்கள் கடத்திய 3 பேர் கைது

காரைக்காலில் இருந்து கடல் வழியே தமிழகத்திற்கு ரூ.1 லட்சம் மதுபாட்டில்கள் கடத்திய 3 பேர் கைது

காரைக்கால் : காரைக்காலில் இருந்து கடல் வழியே தமிழகத்திற்கு ரூ. 1 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை கடத்திய மூவரை போலீசார் கைது செய்தனர். படகு உள்ளிட்ட ரூ.6 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்தனர். காரைக்கால் கோட்டுச்சேரி அக்கம்பேட்டை கடற்கரையில் அடையாளம் தெரியாத பைபர் போட் நிற்பதாக நேற்று முன்தினம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கோட்டுச்சேரி இன்ஸ்பெக்டர் மர்த்தினி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்று, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் நின்ற படகை சோதனையிட்டனர். அதில், மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து படகு மூலமாக தமிழக பகுதிக்கு கடத்தி முயன்றது தெரிய வந்தது. அப்போது, அதேப்பகுதியில் பைக்குடன் நின்ற மூவரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த கீழமூவர்கரை மீனவ கிராமத்தை சேர்ந்த சிவன்,28; குப்புராஜ்,30; மற்றும் வானகிரியை சேர்ந்த மணிபாரதி,32; என்பதும், மூவரும் தீபாவளி பண்டிகைக்காக காரைக்காலில் இருந்து சீர்காழிக்கு ரூ.1 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை படகில் கடல் வழியே கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது. அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்தனர். அவர்கள் கடத்தி செல்ல முயன்ற ரூ.1 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய படகின் மோட்டார் உள்ளிட்ட ரூ.6 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரையும் நேற்று காரைக்கால் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ